கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘ரெம்டெசிவிர்’ மருந்தை டாக்டர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நோயாளிகளின் உறவினர்கள் மருந்தை தேடி அலைந்தனர். இதனைத்தொடர்ந்து கள்ளச்சந்தை மூலம் அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது.
கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கப்பட்டது.
இதன்படி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் 2 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. அங்கு கூட்டம் அதிகரித்ததால்,
திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனாலும் சென்னையில் மருந்து வாங்க வருவோர் கூட்டம் குறைந்தபாடில்லை.
இந்த சூழலில் மக்கள் நலன் கருதி கூட்ட நெரிசலை தவிர்க்க பெரியமேட்டில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் 4 கவுண்ட்டர்கள் மூலம் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்பட உள்ளதாக மருத்துவ பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதன்படி நேற்று முதல் நேரு விளையாட்டு அரங்கில் மருந்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு பணிகள் நிறைவடையாததால் நேற்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து விற்பனை நடைபெற்றது.
நேற்று முதல் நேரு விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் ஏராளமானோர் அங்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்நிலையில் நேரு விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இன்று தொடங்கி உள்ளது. நாளொன்றுக்கு 300 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கி மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்
இடைத்தரகர்கள் யாரையும் அணுக வேண்டாம் என்றும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.