ஒரு காலத்தில் ஒரு ஊரில் யாரோ சிலர்தான் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி இருப்பார் .ஆனால் இன்று யாரோ சிலர்தான் குடிக்காமல் இருக்கிறார்கள்.
அந்தளவுக்கு மது இன்று சமுதாயத்தில் ஒரு அங்கமாக மாறி விட்டது.
ஒருவர் மது அருந்தும்போது அவர் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்று தெரிந்தால் நிச்சயமாக குடிக்க யோசிப்பார்கள்.
நாம் மது அருந்தும் பொழுது சிறிது அளவினை நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். பெரும்பாலான அளவை சிறுகுடல் உறிஞ்சிக் கொள்ளும். அதனால் தான் உணவு உண்ட பின்னர் மது அருந்தினால் போதை ஏற சற்று நேரமாகின்றது.
மதுவின் தன்மையை பொறுத்து அது எத்தனை வேகத்தில் நம் உடல் உறிஞ்சிக் கொள்கின்றது என்பது மாறுபடும்.
உதாரணமாக பீரை விட விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்றவைகள் அதிவேகமாக உறிஞ்சிக் கொள்ளப்படும்.
இப்படி உறிஞ்சப்பட்ட மது உடனடியாக நம் ரத்தத்தில் கலந்து உடலெங்கும் ஓடத் துவங்கும். அதே சமயத்தில் நம் உடல்உறுப்புகள் அதனை வெளியேற்றச் சற்று பிரயத்தனப்பட்டு அதிகமாக வேலை செய்யத் துவங்கும்.
அப்போது சிறுநீரகம் தன் பங்கிற்கு மதுவின் ஓரளவைச் சிறுநீரில் கலந்து வெளியேற்றும். நுரையீரல் தன் பங்கிற்குச் சில அளவு மதுவை மூச்சுக் காற்றில் வெளியேற்றும்.
மேலும் கல்லீரல் தன் பங்கிற்கு பெரும்பாலான ஆல்கஹாலை அசிட்டிக் அமிலமாக மாற்றும். இத்தனை உறுப்புகள் சேர்ந்து அந்த ஆல்கஹாலை வெளியேற்றப் போராடிக் கொண்டிருக்கையில் நாம் அதனை விட வேகமாக அதிக அளவில் மது அருந்தினால் என்னாகும்?
யோசித்து பாருங்கள் .
அதனால் தான் அந்த உறுப்புகள் விரைவில் வலுவிழந்து செயலிழந்து போகின்றன. இதுவே ஒரு வகையில் தற்கொலை முயற்சி மாதிரி தான்.
இரத்தத்தில் கலந்து உடலில் பயணிக்கும் ஆல்கஹால் நம் மூளைக்கும் ஒரு பயணம் போகும்.
அதனால் சிலருக்கு , தூக்கம் தூக்கமாக வரும். நினைவுகள் மழுங்கும். சற்று முன் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்காது. வேகமாக இயங்க முடியாது. கையில் இருக்கும் மதுவைத் தடுமாறிக் கொட்டி விட்டு அதனை வெறித்துப் பார்ப்பார்கள், உடல் ஒத்துழைக்காது ,நிலை தடுமாறும்..சிலருக்கு கண் பார்வை மங்கி போய் கேட்கும் திறன், சுவை உணர்தல், தொடுதல் போன்ற உணர்வுகளில் தடுமாற்றம் வரும்
இன்னும் சிலர் அதிக பாசக்காரராக மாறி விடுவார் அல்லது அதிக கோபக்காரராக மாறி விடுவார். இல்லையென்றால் அதிகம் உணர்ச்சி வசப்படுவார். சிலருக்கு பார்வை தெளிவாக இல்லாமல் பேச்சுக் குளறி மட்டையாகி விடுவார்.
எந்தவொரு வெளித் தூண்டல்களும் அவரைப் பாதிக்காது. எழுந்து நிற்க முடியாது, நடக்க முடியாது. வாந்தி எடுக்கலாம். நினைவு தப்பி விடலாம்.
சிலருக்கு உடல் சில்லிட்டுப் போய் ,மூச்சு விடுதல் குறைந்து போகும்.சிலருக்கு இதயத் துடிப்பு குறைந்து இறந்து போகவும் அதிக வாய்ப்புள்ளது.
உடலுக்கு இவ்வளவு தொல்லைகள் தரும் மதுவை இனி நாம் தொடலாமா ?
சற்றே யோசியுங்கள் !
மது நாட்டுக்கு கேடு அல்ல, நாட்டுக்கு லாபம் மட்டுமே.
மது நம் உடலுக்கு மட்டுமே கேடு.