Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் 2 நாளில் 5 டிகிரி வெப்பநிலை உயர வாய்ப்பு.

0

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வழக்கத்தைவிட 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரவில் பனி இன்னும் குறைந்தபாடில்லை. இரவில் பனி பெய்தாலும் கூட பகலில் வெயில் சுட்டெரிக்கிறது.

அதனால் மக்கள் கோடைக் காலத்தை சிறப்பான முறையில் எதிர் கொள்வது அவசியம்.
இந்த ஆண்டு கோடைக்காலம் பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், தமிழகம் , புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் வரும் 5 ஆம் தேதிவரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், தற்போது வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் குளிர்காற்று நின்றுவிட்டது எனவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு, வழக்கத்தைவிட 5 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை உயர வாய்ப்புள்ளது எனவும் புவியரசன் கூறியுள்ளார்.

மேலும் வங்கக் கடலில், கடல் மட்டத்தில் நிலவும் எதிர் காற்று சுழற்சியால் கடலோர பகுதிகளில் கிழக்கு திசையிலிருந்து குறைந்த வேகத்துடன் கூடிய ஈரக்காற்று வீசுகிறது என்றும், இதன் காரணமாக கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்று சேலத்தில் 100 டிகிரி, கரூர் பரமத்தியில் 99 டிகிரி, மதுரையில் 98 டிகிரி, நாமக்கல்லில் 97 டிகிரி வெப்பநிலை பதிவாகி கோடை தொடங்கிவிட்டதை உணர்த்தியிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.