புதுவை சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கடந்த 17-ந்தேதி புதுவைக்கு வந்து, பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று புதுவை வந்தார். டெல்லியில் இருந்து காலையில் விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த வரவேற்பைத் தொடர்ந்து, ராணுவ ஹெலிகாப்டரில் புதுவை லாஸ்பேட்டையில் உள்ள ஹெலிபேடு தளத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.
இந்த வரவேற்பைத் தொடர்ந்து, கார் மூலம் ஜிப்மர் மருத்துவமனை கருத்தரங்கு கூடத்துக்கு பிரதமர் வந்தார். அங்கு நடைபெற்ற விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கும் 4 வழிப்பாதை (புதுவையின் காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய திட்டம்), சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். புதுவை துறைமுகத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் சிறிய துறைமுக மேம்பாட்டு பணி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டரங்கில் ரூ.78 கோடியில் 400 மீட்டர் தடகள பயிற்சிக்கு சிந்தடிக் டிராக் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
ஜிப்மரில் ரூ.28 கோடியில் கட்டப்பட்ட புதிய ரத்த வங்கி, இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் ரூ.18.30 கோடியில் மகளிர் விடுதி, கடற்கரையில் ரூ.14.23 கோடியில் கட்டப்பட்ட மேரி கட்டிடம் ஆகியவற்றை பிரதமர் திறந்து வைத்தார்.
இதையடுத்து அரசு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவை மக்கள் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்கின்றனர். புதுச்சேரி மண் பன்முகத்தன்மையின் அடையாளம். இங்கிருந்து ஏராளமான புரட்சியாளர்கள் வந்துள்ளனர். புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களால் சாலைப் போக்குவரத்து வசதிகள் மேம்படும். உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளால் மக்களின் வாழ்க்கைத்தரம் அதிகரிக்கும்
பாரதியார் உள்பட பல கவிஞர்களின் தாய்வீடாக புதுச்சேரி இருக்கிறது. புதுச்சேரி மக்களின் வாழ்வை வளப்படுத்தும் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கிராமப்புற, கடலோர பகுதிகளை இணைக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ரூ.2,426 கோடியில் விழுப்புரம் – நாகை 4 வழிச்சாலை திட்டத்தால் பொருளாதாரம் மேம்படும். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களின் திறமை வெளிகொண்டு வரப்படுகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
உரையாற்றும் போது ”கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்ற யவை” என திருக்குறளை மேற்கொள்காட்டி பிரதமர் மோடி பேசினார்.