சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 2 நாட்களாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை.
இந்தநிலையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வீடுகளுக்கு 14.2 கிலோ எடையிலும், ஓட்டல்கள் மற்றும் பிற வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பிரதேசங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு 5 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 2.38 கோடி கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் நிலவரத்துக்கு ஏற்ப மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.714 ஆகவும், மானியம் ரூ.174.72 ஆகவும் இருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.569 ஆக இருந்தது. ஆனால் மானியம் கொடுக்கப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.606 முதல் ரூ.881 வரை வெவ்வேறு விலைகளில் இருந்தது. அப்போது வாடிக்கையாளர்களுக்கு மானியமாக ரூ.25.45 மற்றும் ரூ.23.95 என குறைந்த அளவிலேயே செலுத்தப்பட்டது. சிலருக்கு மானியம் வங்கி கணக்கில் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்தநிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் ரூ.660 ஆக இருந்த கியாஸ் சிலிண்டர் விலை மாத இறுதியில் ரூ.50 உயர்ந்து ரூ.710-க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது, மானியமாக ரூ.24.95 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
கடந்த மாதத்திலும் (ஜனவரி) கியாஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக தொடர்ந்த நிலையில், இம்மாதம் 4-ந்தேதி ரூ.25 அதிகரித்து ரூ.735-க்கு விற்பனையானது. ஏற்கனவே, கொரோனா பாதிப்பால் கடும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவித்து வரும் நிலையில், இவ்வாறு அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வருவது கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது முறையாக சமையல் சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.
மானியமில்லா சமையல் எரிவாயு கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் ரூ.25 உயா்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் இது 3-ஆவது விலையேற்றமாகும். முன்னதாக பிப்.4-ஆம் தேதி ரூ.25 உயா்த்தப்பட்டது. பிறகு பிப்ரவரி 15-ஆம் தேதி ரூ.50ம், தற்போது மேலும் ரூ.25 உயா்த்தப்பட்டுள்ளதால் ஒரே மாதத்தில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனா்.
இன்று முதல் அமலுக்கு வந்த இந்த விலையேற்றத்தின் படி சென்னையில் ஒரு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு புறம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும், மற்றொரு புறம் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்து வருவது ஏழை, எளிய மக்களுக்க மென்மேலும் பொருளாதாரச் சுமையை அதிகரிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனா்.
ஒரே மாதத்தில் 3-வது முறையாக விலை ஏற்றப்பட்டதற்கு பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.