இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.
முதலாவது டெஸ்டில் இ்ங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இ்ந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் மோடேராவில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது.
தொடக்க டெஸ்டில் தோற்றதால் கடும் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணி 2-வது டெஸ்டில் எழுச்சி பெற்றது. ஆடுகளமும் (பிட்ச்) முதல் நாளில் இருந்தே சுழலுக்கு ஒத்துழைத்ததால் இந்திய வீரர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின்-அக்ஷர் பட்டேல் கூட்டாக இணைந்து மொத்தம் 15 விக்கெட்டுகளை அறுவடை செய்ததோடு, இங்கிலாந்தை 3½ நாளிலேயே சுருட்டி வீசினர். ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோரது சதமும் வெற்றிக்கு உதவின.
ஆனால் 3-வது டெஸ்ட் மின்னொளியில் அரங்கேறும் பகல்-இரவு போட்டி என்பதால் கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பகல்-இரவு டெஸ்டில், வழக்கமான சிவப்பு நிற பந்துக்கு பதிலாக பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. பிங்க் பந்து கணிசமாக ஸ்விங் ஆகும். அதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கும். எனவே முந்தைய டெஸ்டில் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இறங்கிய இந்திய அணி, இந்த டெஸ்டில் குல்தீப் யாதவை கழற்றி விட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கும் என்று தெரிகிறது. இதே போல் கடந்த டெஸ்டில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா திரும்புகிறார்.
வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு இது 100-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 11-வது இந்தியர், 2-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பெறுகிறார். 99 டெஸ்டில் விளையாடி 302 விக்கெட்டுகள் வீழ்த்திய இஷாந்த் ஷர்மா தனது செஞ்சுரி டெஸ்டில் முத்திரை பதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதே போல் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சாதனையை நோக்கி பயணிக்கிறார். இன்னும் 6 விக்கெட் கைப்பற்றினால் அவர் 400 விக்கெட் வீழ்த்திய 4-வது இந்தியராக சாதனை பட்டியலில் இணைவார். அனேகமாக அவர் டெஸ்டில் இந்த சாதனையை எட்டிப்பிடிக்க வாய்ப்புள்ளது.
ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ள இந்திய கேப்டன் விராட் கோலி கடந்த 34 சர்வதேச இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்திருந்தார். அந்த டெஸ்ட் தான் இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் என்பது நினைவு கூரத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த டெஸ்டில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். குறைந்தது டிராவாவது செய்தாக வேண்டும். தோற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவுவாகி விடும். அந்த வகையிலும் இந்த டெஸ்ட் இந்தியாவுக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.
தொடக்க டெஸ்டில் கேப்டன் ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மிரட்டிய இங்கிலாந்து அணி 2-வது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் 200 ரன்களை கூட நெருங்க முடியாமல் முடங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற எஞ்சிய இரு டெஸ்டிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் அந்த அணிக்கும் இது வாழ்வா-சாவா? ஆட்டமாக அமைந்துள்ளது.
இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இந்த போட்டியில் விளையாட உள்ளனர். அவர்களது வருகை இங்கிலாந்து அணிக்கு புத்துணர்ச்சி அளிக்கும். பேட்டிங்கில் ஜோ ரூட் தவிர மற்றவர்களின் ஆட்டம் சீரற்ற வகையில் இருப்பது அந்த அணியை கவலையடையச் செய்துள்ளது.
இந்த போட்டி நடக்கும் மோடேரா சர்தார் பட்டேல் ஸ்டேடியம் இடித்து புதிதாக கட்டப்பட்டுள்ளது. 63 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.800 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த ஸ்டேடியம், ஒரு லட்சத்து 10 ஆயிரம் இருக்கை வசதியை கொண்டது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் என்ற பெருமையை பெறுகிறது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் (90 ஆயிரம் ரசிகர்கள் இருக்கை) உலகின் பெரிய ஸ்டேடியமாக இருந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 50 சதவீதம் அளவுக்கே ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் 55 ஆயிரம் ரசிகர்கள் வரை நேரில் கண்டு களிப்பார்கள்.
டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும்.