Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் 3.5லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருச்சியில் விஜயபாஸ்கர் பேட்டி

0

கொரோனா வைரஸ் 2வது அலை வருவதற்கான சாத்தியக் கூறு மிகவும் குறைவு திருச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சர் பேட்டி

தமிழகத்தில், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வருவதற்கான சாத்தியக் கூறு மிகவும் குறைவு, என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் கடந்த மாதம் 16ம் தேதி முதல், கோவேக்சின், என்ற கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஏற்கனவே, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இன்று திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
‘‘ஒரு மருத்துவர் என்ற முறையில், தடுப்பூசி குறித்து மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன் கள பணியாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவும், அச்சத்தை போக்கும் வகையிலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போது, தெரிவித்தார்.
திருச்சி, மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில், 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட அவர் கூறியதாவது:

தமிழகத்தில், அரசு எடுத்த தொடர் நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவது மட்டுமின்றி, கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும், என்றும் மருத்துவ வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தில், இதுவரை மருத்துவ பணியாளர்கள் முன்கள பணியாளர்கள் என, 3 லட்சத்து 53 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். பொது மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனுமதிக்கு காத்திருக்கிறோம்.

14 லட்சத்து 85 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசியும், ஒரு லட்சத்து 89 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசியும் வந்துள்ளது.
முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள், அடுத்த 28 வது நாள் 2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்படி, முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்திய தயாரிப்பான முதல் டோஸ் கோவேக்சின் எடுத்துக் கொண்ட 28 நாட்களுக்கு பின், 2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளேன். ஊசி போட்ட வலி கூட தெரியாத வகையில், எனக்கு எவ்வித பக்க விளைவும் இல்லை.
தடுப்பூசி என்றாலே, அது பற்றிய மாற்றுக் கருத்துக்கள் வருவது இயல்பு. அதை புறந்தள்ளும் வகையில், தயக்கத்தை போக்கும் வகையிலும் நானும், மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளும், மாவட்ட அதிகாரிகளும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஒரு நாளுக்கு 10 ஆயிரம் பேருக்குகொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கொரோனாவை இல்லாமல் செய்வதற்கு, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
வளர்ந்த நாடுகளில், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தடுப்பூசியும் போட்டு வருகின்றனர்.

ஐசிஎம்ஆர் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதித்த இரண்டு தடுப்பூசிகளும் சிறப்பானவை. எவ்வித தயக்கமும் இல்லாமல், அனைவரும் விரும்பிய தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். புரளிகள் எதையும் நம்ப வேண்டியதில்லை.

தமிழகத்தில் மிகவும் கட்டுக் கோப்பாக இருப்பதாலும், மருத்துவர்களின் துணிச்சலான செயல்பாடுகளாலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வருவதற்கான சாத்தியக் கூறு மிகவும் குறைவு. வைரஸ் தடுப்பில் இருந்த சவால்களை சமாளித்து, இறப்பு விகிதமும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் சிறப்பான பணியால், உச்சகட்ட பயத்தில் இருந்த நிலை மாறி, சகஜ நிலைக்கு மாறியுள்ளோம். மக்கள் பிரதிநிதி மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும்படி, மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம். அரசு அனுமதிக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
திருச்சியில் இதுவரை 1,3,322 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 1,114 பேர் 2வது டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.

முதல் டோஸ் கோவேக் சின் தடுப்பூசி 26 பேரும், கோவிஷீல்டு தடுப்பூசி 28 பேரும் இன்று போட்டுக் கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.