புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருச்சியில் இன்று தடையை மீறி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருச்சியில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி- கரூர் புறவழிச்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் திருச்சி – கரூர் புறவழிச்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
பின்னர், சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரையும் போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்