உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 6-வது நாளாக தொடர்ந்து வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7-ந் தேதி உடைந்து அலெக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கரையோர மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அங்கிருந்த அனல், நீர்மின் நிலையங்கள் பெருத்த சேதம் அடைந்தன.
தபோவன் நீர்மின் நிலைய சுரங்கம், சேறு மற்றும் இடிபாடுகளால் மூடிக்கொண்டது. உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 25 முதல் 30 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
அவர்களையும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களையும் மீட்கும் பணி, இன்று 6-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வெள்ளத்தில் சிக்கிய 204 பேரில், இதுவரை 36 பேர்களின் உயிரற்ற உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 10 பேர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னும் 170 பேரை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை. சுரங்கத்தில் சிக்கயவர்களை காப்பாற்ற, எந்திரங்களை கொண்டு துளையிட்ட போது, எந்திர பாகம் உடைந்ததால் அந்த முயற்சி சிறிது நேரம் கைவிடப்பட்டது.
அந்த பகுதியில் தற்போது ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை, இந்தோ-திபெத் எல்லை படை ஆகியவற்றை சேர்ந்த 600-க்கு மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை காப்பாற்ற எல்லாவித முயற்சிகளும் செய்யப்பட்டு வருவதாக போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமார் தெரிவித்தார்.
தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கம், 1,500 மீட்டர் நீளம் கொண்டது. சுரங்கத்தில் சேர்ந்துள்ள சேறு, இடிபாடுகளை கனரக எந்திரங்கள் உதவியுடன் அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 120 மீட்டர் தூரத்துக்கு இடிபாடுகளை அகற்றி விட்டனர். இன்னும் 100 மீட்டர் தூரத்துக்கு இடிபாடுகளை அகற்றி விட்டால், தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை அடைந்து விடலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.