திருச்சியில்
விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு மாநில பொதுக்குழுக் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நிறுவனத் தலைவர் வேதாந்தம் ஜி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாநில செயல் தலைவர் செல்லமுத்து, காப்பாளர் ரத்தினசாமிஜி, கிரிஜா சேஷாத்திரி, இணை பொதுச்செயலாளர்கள் ராமசுப்பு, விஜயகுமார், சந்திரசேகர், கணேசன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்துக்கு முன்னதாக வேதாந்தம் ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழ் பண்பாடு, கலாச்சாரங்கள், இலக்கியங்கள் உட்பட அனைத்திலும் பங்கேற்று 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையை கொண்ட பூஜாரிகள் தமிழகத்தில் 6 லட்சம் பேர் உள்ளனர். ஆனால், இவர்கள் காலம் காலமாக தொடர்ந்து கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். கோயிலை மட்டும் நம்பியே பூஜாரிகள் இருக்கின்றனர். உண்டியல் வருமானமும் கிடையாது. அதனால், பூஜாரிகளுக்கு அரசு குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரத்து 500 ஊதியமாக வழங்க வேண்டும்.
கிராமக்கோயில்களுக்கான ஒருகால பூஜை திட்டத்துக்கு ரூ.300 வழங்கப்படுகிறது. இந்த குறைந்ததொகையை வைத்து எதுவும் செய்ய முடியாது. அதனால், மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான வைப்பு நிதியை அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களின் நிரந்தர வைப்பு நிதியில் இருந்து எடுத்து பயன்படுத்துக் கொள்ள வேண்டும். கோயில்களில் இருந்து வரும் வருமானத்தை கோயில்களுக்கும், பூஜாரிகளுக்கும் பயன்படுத்தாமல் டெபாசிட்டாக வைப்பதில் பயனில்லை.
பக்தர்கள் கோயிலுக்கு காணிக்கையாக கொடுக்கும் பசுவில் இருந்து கிடைக்கும் பாலை இறைவனுக்கு தான் பயன்படுத்த வேண்டும். மேலும், பசுக்களையும் ஏலம் விட்டுவிடுகின்றனர். நேராக அவை இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதனை அரசு நிறுத்த வேண்டும். பசுமடம் போன்றே கோயில்களில் பூங்காவனம் இருக்க வேண்டும். அங்கிருந்து பெறப்படும் பூக்களே சாமிகளுக்கு பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். தற்போது அவையெல்லாம் இல்லை. இதனால் பூக்கட்டுவோர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கோயில்களில் பூங்காவனங்கள் அமைக்க வேண்டும். பூ கட்டுவோருக்கு என தனி நலவாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கோயில்களை நிர்வகிக்க தனி வாரியம் அமைக்க வேண்டும்.
பூஜாரிகள் நல வாரியத்தின் மூலம் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெறுவதில் சில அரசு அதிகாரிகள் தடையாக உள்ளனர். அவற்றையெல்லாம் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பெருமளவு மதமாற்றம் நடந்து வருகிறது. ஏழ்மையில் உள்ளவர்களின் வறுமையை பயன்படுத்தி மதமாற்றுவதை சுப்ரீம்கோர்ட்டே கண்டித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் மதமாற்றம் தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும். இந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை தங்களது தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறச் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிப்போம். தேர்தலில் வெற்றி பெற்றால் இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் முதல் கையெழுத்து போடுவோம் என உறுதியளிக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் வேல் ஏந்த ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இந்து மத மறுமலர்ச்சி அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. இந்துக்களை புறக்கணிப்பதோடு, அவர்களது உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்ற எண்ணம் அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. பொதுவாக பேசாமல், குறிப்பிட்ட மதத்தை மட்டும் பேசுபவர்கள் பின்னணியில் வெளிசக்திகள் இருப்பது தெரிகிறது. இந்துக்களுக்கு எதிரியில்லை என்று கூறும் திமுக ஸ்டாலின் கோயில்களுக்குச் செல்வதில்லை. இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை. அதனால் அவர் உணர்வுப்பூர்வமாக இதனை கூறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விசுவ இந்து பரிஷத் மாநிலத்தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியதாவது:
தமிழகத்தில் இப்போதைய சூழலில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலை துாக்கிக் கொண்டிருக்கிறது. தேசிய புலனாய்வு முகமையினர் நிறைய நபர்களை கைது செய்து வருகின்றனர். தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் தேர்தல் நேரத்தில் அமைதியை சீர்குலைக்கக்கூடிய வகையில் பலவிதமான சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்னைகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, போலீசார் பாரபட்சமின்றி அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து சட்டம் ஓழுங்கு பிரச்னை, மதக்கலவரம், சாதிக்கலவரம்வராமல் தடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இதில் அலட்சியப் போக்கு கூடாது. தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் தான் ஓட்டுவங்கி அரசியல் நடத்துவார்கள். ஆனால், அரசும், போலீசும் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் இந்து ஓட்டு வங்கி உருவாகி வருகிறது. இத்தேர்தலில் இந்து விரோத சக்திகளுக்கு, இந்து ஓட்டு வங்கியால் பாதிப்பை அனைவரும் பார்க்கப்போகிறோம். அதனால் ஏற்பட்ட பயத்தால் தான் சில அரசியல் கட்சிகள் நாங்கள் இந்துக்களுக்கு ஆதரவானவர்கள், விரோதியிலை என்று பேசத் தொடங்கியுள்ளனர். தேர்தல் பணியை முன்பெல்லாம் அரசியல் கட்சியினர் செய்தனர். இப்போது மார்க்கெட்டிங் ஏஜென்சியினர் தேர்தல் பணிகளை மேற்கொள்கின்றனர். அவர்களது சர்வேயில் இந்துக்களை உணர்வை புண்படுத்தும் வகையில் யார் பேசினாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. தமிழகத்தில் ஆன்மிக எழுச்சி, இந்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
காலம் காலமாக சாதி அரசியலை வளர்த்து இந்து சமுதாய ஒற்றுமையை திராவிட கட்சிகள் சீர்குலைத்து வந்தனர். இன்று அதையெல்லாம் தாண்டி மக்களிடயே விழிப்புணர்வும், ஒற்றுமையும் ஏற்பட்டுள்ளது. இது நல்ல தொடக்கம். அதன் வெளிப்பாடாகத்தான் ஸ்டாலின் கூட கையில் வேல் ஏந்தத் தொடங்கியிருக்கிறார். அரசியல் கட்சித்தலைவர்கள் வேலாயுதமாக மாறியிருக்கின்றனர்.
மதச்சார்பற்ற அரசு, அறநிலையத்துறை மூலம் கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது. இவற்றின் மூலம் கிடைக்கும் பணத்தை இந்து சமுதாயத்துக்காகவும், இந்து சமுதாயத்தில் உள்ள ஏழை மக்களின் கல்வி, மருத்துவக்காக பயன்படுத்துவதில்லை. சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் பல கோயில்களை கட்டி வைத்துள்ளனர். இவற்றில் பல பொக்கிஷங்களை காணவில்லை. இதில் பொன்மாணிக்க வேல் போன்றவர்கள் மீட்டெடுத்தது போக பல மீட்டெடுக்காமல் உள்ளது. இந்த பொக்கிஷங்களை மீட்டெடுத்து கொண்டு வர வேண்டும்.
அரசாங்கம் ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும். அரசு, கண்காணிப்பாளராக இருந்து சொத்துக்கள் திருட்டுப்போகாமல் பாதுகாக்கலாம். ஆனால், அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தின் சொத்துக்களை நிர்வகிக்கக் கூடாது. இஸ்லாமியர்களின் மசூதி ஜமாத் கட்டுப்பாட்டிலும், கிறிஸ்தவர்களின் சர்ச்சுகள் சபையின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. ஆனால், இந்துக்களின் கோயில்கள் மட்டும் மதச்சார்பற்ற அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன்மூலம் கிடைக்கும் வருமானம் இந்து சமுதாயத்திற்குத்தான் பயன்படுத்த வேண்டும். அரசு எடுக்கக்கூடாது.
ஒரு மதத்தின் சொத்துக்களை நிர்வகிக்க அரசு எப்படி அமைச்சரை நியமிக்க முடியும். துறைகளின் வழிகாட்டுதலின்படி தனித்து இயங்கும் வாரியமாக இருக்க வேண்டும். பிரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த நடைமுறையை மாற்றி, தேர்தலில் வெற்றி பெறும் எந்தக்கட்சியாக இருந்தாலும், அறநிலையத்துறையை விட்டு அரசு வெளியேற வேண்டும். தனித்து இயங்கும் வாரியம் அமைக்க வேண்டும்.
சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி மானியங்கள் நிறைய வழங்கப்படுகின்றன. அதுபோன்று இல்லாமல், ஏழை மாணவர்கள் எந்த சாதி, மதமாக இருந்தாலும், ஏழை மாணவர்கள் அனைவருக்கும் அரசு சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து ஏழை இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் வேண்டும்.
உணவில் மதத்தை திணித்துள்ளனர். சைவ ஓட்டல்களில் கூட ஹலால் போர்டு வைத்துள்ளனர். இது உணவில் இஸ்லாமிய மதத்தை திணிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அதனால், ஹலால் என்ற போர்டுகளை எடுக்காவிட்டால்த மிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.
இந்து பாதுகாப்பான கட்சி என்று எதுவுமில்லை. காங்கிரஸ், கம்யூ.,கட்சிகளை ஒப்பிடுகையில் பாஜ இந்துகளுக்கு விரோதமாக நடப்பதில்லை. கிருபானந்த வாரியார் பிறந்தநாள் விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த தாமதமானது.
கடந்த தேர்தலில் அதிமுக, திமுக இடையே ஒரு சதவீதம் தான் ஓட்டு வித்தியாசம் இருந்தது. விஎச்பி தமிழ்நாடு அமைப்புக்குட்பட்ட கிராமக்கோயில் பூஜாரிகள் பேரவை, பூக்கட்டுவோர் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை உள்ளது. இவர்கள் தமிழகத்தில் உள்ள 6 கோடியே 72 லட்சம் வாக்காளர்களில் 15 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்துக்களுக்கு ஆதரவாக நம் இயக்கத்தின் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறதோ, அரசியல் கட்சிகளுக்குத்தான் ஓட்டளிப்பார்கள். இந்து ஓட்டு வங்கியின் வலிமை அப்போது தெரியும்.
இந்து கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களுக்கு குத்தகைதாரர் சட்டம், கடைகளுக்கு வாடகைதாரர் ஒழுங்குமுறைச்சட்டம் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளித்து அது தொடர்பான வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் அமைத்து அவ்வழக்களை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.