Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சாலைகளில் திரியும் கால்நடைகள் வளர்ப்போர் மீது வழக்கு மற்றும் அபராதம். காவல்துறை துணை ஆணையர் அறிவிப்பு.

0

திருச்சி மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக
சாலைகளில் திரியும் கால்நடைகளை
கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மாநகராட்சி.

திருச்சி மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள் உள்ளிட்ட விலங்கினங்களை கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி திணறி வருகின்றது.

திருச்சி மாநகராட்சியில், சாலைகளில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பல நேரங்களில் விபத்துகள் ஏற்படவும், உயிரிழப்புகளுக்கும் அவை காரணமாக அமைந்து விடுகின்றன. எனவே கால்நடைகளை வளர்ப்போர், அவற்றை சாலைகளில் திரியாத வகையில் கட்டுப்படுத்த வேண்டும், மீறினால் அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் பலமுறை அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது.

என்றாலும், கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவை குறித்து கண்டுகொண்டதாக தெரியவில்லை.


நகர்புறங்களில் கால்நடைகளை வளர்க்கும் வழக்கம் அதிகரித்து வருவதாலும், அவற்றுக்கு மேய்ச்சல் இடம் ஏதுமில்லாததாலும் பெரும்பாலான நேரங்களில் அவை சாலைளில் சுற்றித் திரிகின்றன.

இதில் சில நேரங்களில், மாடுகள் முட்டிக்கொண்டு சண்டையிடுவதால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலைகளில் விழுந்து காயமடைவதும் அதிகரித்து வருகின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கே.கே. நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற வெல்டிங் தொழில் செய்யும் செல்வராஜ் என்ற நபர், சாலையோரம் நின்றிருந்த இரு மாடுகள், திடீரென முட்டிக்கொண்டு சாலையின் மையப்பகுதிக்கு வந்ததால், வாகனத்தை நிறுத்த முடியாமல் கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை ரோந்துப் போலீஸôர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபோன்று பாகுபாடற்ற வகையில் திருச்சி மாநகரில், விமான நிலையம், கே கே நகர், சுப்பிரமணிபுரம் காவலர் குடியிருப்பு பகுதி, கல்லுக்குழி, மன்னார்புரம், கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர், கருமண்டபம், மாநகரின் பிரதான பகுதிகளான கண்டோண்மென்ட், தில்லைநகர், தென்னூர், உறையூர் என அனைத்துப் பகுதிகளிலும் காலை, மாலை எந்நேரமும் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன.

இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகின்றது. இது குறித்து, மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், கால்நடைகளை திரியவிடக்கூடாது என அறிவிப்புகள் செய்தும், அபராதங்கள் விதித்தும், உரிமையாளர்களின் மெத்தனப்போக்கால் தொடர்ந்து கால்நடைகள் சாலைகளில் திரிகின்றன. மாநகர் முழுவதும் திரியும் கால்நடைகளை கணக்கிட்டால் அவை நூற்றுக்கணக்கில் இருப்பதால் அவற்றை பிடித்து அடைத்து வைக்க போதுமான இடவசதிகள் இல்லை. மேலும் வாகனங்களில் ஏற்றி வேறு இடங்களில் கொண்டு போய் விடுவதும் சாதாரண பணி இல்லை.

மாடுகள் மட்டுமின்றி குதிரைகள், நாய்களும் அதிகளவில் திரிகின்றன எனவே அவற்றை என்ன செய்வதென புரியவில்லை என்கின்றனர்.

தற்போது போக்குவரத்திற்கு இடையூறாக தெரியும் கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை துணை ஆணையர் அறிவித்துள்ளார்.

இது உடனடியாக நடைமுறைக்கு வந்தால் இதுபோல் சாலையில் திரியும் கால்நடைகள் கட்டுப்படுத்தப்படும் என பொதுமக்கள் நம்புகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.