திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில்
சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 12 கோடி ஒதுக்கீடு
அதிமுக தெற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் ப.குமார் தகவல்.
திருச்சி மாவட்டத்தில், திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ப. குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது :
அதிமுக தெற்கு புறநகர் மாவட்டப் பகுதிகளுக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதியில் அடங்கிய பல்வேறு பகுதிகளில் சாலைகள் பழுதடைந்துள்ளன. மேலும், புதைவடிகால் திட்டப்பணிகள் நடந்துவருவதால் சாலைகள் வாகனப் போக்குவரத்துக்கு லாயக்கற்ற வகையிலிருந்தன. சமூக ஆர்வலர்கள் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இது குறித்து திருச்சி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் , ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ் .பி, வேலுமணி ஆகியோரிடம் கோரிக்கை வைத்து, வலியுறுத்தினேன். அதனை ஏற்ற தமிழக முதல்வர், இத்திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தும் வகையில் ரூ. 12 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்டப்பட்ட வார்டுகள் 7, 29, 30, 62, 63 மற்றும் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட, அரியமங்கலம், எஸ்ஐடி, கணேஷ் நகர், கைலாஷ் நகர், அண்ணாசாலை, பாலாஜி நகர், முத்துமணி நியூ டவுன், வைத்திலிங்க நகர், ரோஷன் நகர், தியாகராய நகர், அஷ்டலெட்சுமி நகர், எறும்பீஸ்வரர் நகர், எவிஎம் ஜோதி நகர், கணஷ் நகர், முன்னாள் ராணுவத்தினர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஃபேவர் ஃபினிஷர் முறையில் நவீன இயந்திரம் மூலம் தரமான தார்சாலைகள் அமைக்கப்படும்.
இது தொடர்பான ஒப்பந்தம் இருநாள்களில் முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி அடுத்த ஒன்றரை மாதத்துக்குள் பணிகள் நிறைவு பெறும். கோரிக்கையை ஏற்று, தெற்கு புறநகர் மாவட்ட பகுதியில் உள்ள பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.