2021 ஜனவரி 1 ஆம் தேதி (இன்று) முதல் வங்கிக் காசோலை முதல் ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்வது வரை, வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
வர்த்தகத்தில் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு உள்ளாக விற்று முதல் இருக்கும் வர்த்தகர்கள் இனிமேல் காலாண்டுக்கு ஒருமுறைக்கு ஜிஎஸ்டி ரிட்டன்-3பி தாக்கல் செய்தால் போதுமானது. தற்போது மாதம்தோறும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இது இனிமேல் 3 மாதங்களுக்கு ஒருமுறை தாக்கல் செய்யும் நடைமுறை ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஜனவரி 1-ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, வங்கிமோசடிகளைத் தவிர்க்கும் வகையில் ஒருவருக்கு ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக காசோலை அளித்தால், பணம் வழங்குதற்கு முன், அந்த காசோலை வழங்கிய நபரிடம் சில முக்கிய விஷயங்களைக் கேட்டு உறுதி செய்யப்படும்.
இந்த வசதி கட்டாயமானது அல்ல. வங்கி வாடிக்கையாளர்கள் விரும்பினால் இந்த வசதி வைத்துக்கொள்ளலாம்.
ஆனால், ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ள காசோலைகளுக்கு கட்டாயம் காசோலை வழங்கிய நபரிடம் பேசி சில தகவல்கள் பெற்றபின்புதான் பணம் வழங்கப்படும்.