Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழக முதல்வர் பத்திரிகையாளர் சந்திப்பு முழுவிபரம்.

0

என் தொகுதி மக்கள் என்னை மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை.

அதிமுக தலைமையில்தான் கூட்டணி ,முதல்வர் வேட்பாளர் நான்தான் இதில் இதுவரையில் மாற்றம் ஏதுமில்லை என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
திருச்சியில் இருநாள்களாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள அவர், வியாழக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறியது…
நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கிய தேர்தல் பிரசாரத்தை அடுத்து திருச்சி மாவட்டப் பகுதிகளில் இருநாள்களாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்த பிரச்னையும் கிடையாது. ஏற்கெனவே உள்ள கட்சிகள் அனைத்தும் உள்ளன. அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளோம். ஆனால், கூட்டணியில் பிரச்னை உள்ளதாக ஊடகங்கள்தான் கூறுகின்றன. பா ஜ க திமுகவுடன் 5 ஆண்டுகாலமாக கூட்டணி வைத்திருந்தனர். இந்த கேள்விகளை திமுகவிடம் கேட்பதில்லை எங்களிடம் மட்டுமே கேட்கின்றரர். முதல்வர் வேட்பாளர் நான்தான் என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு முறைப்படி கட்சி சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே அதிலும் எந்த குழப்பமும் கிடையாது. புதிய கூட்டணி குறித்து தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் அறிவிக்கப்படும்.
அதுபோல கூட்டணி கட்சியில் உள்ளவர்கள் கூறும் கருத்துக்கள் அவர்கள் கட்சி கொள்கையாகும். கட்சி கொள்கை வேறு, கூட்டணி வேறு. ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கை உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் நாங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. எனவேதான், தேர்தல் பிரசாரத்தை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தொடங்கியுள்ளோம்.

அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, அனைத்து தரப்பினரையும் சந்தித்து எங்களது நிலை குறித்து விளக்க வேண்டியுள்ளது. எனவேதான் முன்கூட்டியே பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவர் ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம் குறித்து, ஆளுநரிடம் புகார் செய்துள்ளார். ஒப்பந்தம் தொடர்புடைய பணிகள் முழுக்க முழுக்க துறைசார்ந்த அலுவலர்கள் தொடர்புடைய பணி.

இது அதிமுக மட்டுமல்ல திமுக ஆட்சியிலும் பொருந்தும். எனவே அது குறித்து நாம் சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட விவரம் கூட தெரியாமல் புகார் கூறும் தமிழக எதிர்கட்சி தலைவரைப் போல வேறு எங்கும் பார்க்க முடியாது.
நடிகர் கமலை ஏற்றுக்கொள்வது மக்கள் கைகளில் உள்ளது. அவர் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதுபோல நடிகர் ரஜின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் எனவே அந்த விவகாரத்தில் தலையிட முடியாது. இது ஜனநாயக நாடு எனவே யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரும் உரிமை உள்ளது. நான் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 6 முறையும் மக்களைவைத் தேர்தலில் 3 முறையும் போட்டியிட்டுள்ளேன். என்னை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனது தொகுதிக்கு தேவையானவற்றை பெரும்பாலும் நிறைவேற்றியுள்ளேன். எனவே என்னை மக்கள் மீண்டும் தேர்வு செய்வர் என்ற நம்பிக்கை உள்ளது. நான் மீண்டும் மீண்டும் எடப்பாடி தொகுதியில்தான் போட்டியிடுவேன். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் விரைவில் என்னைப்போலவே தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.
மேலும், போட்டியிடும் தொகுதிகள் குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். சொந்த தொகுதியை விட்டு வேறு தொகுதியில் சில தலைவர்கள் போட்டியிடலாம். தோல்வி பயத்தில் வேறு தொகுதியில் போட்டியிடுவதா பொருள் இல்லை. அவ்வாறெனில், எதிர்கட்சித் தலைவர் அவரது சொந்த தொகுதியில் போட்டியிடாமல் வேறு தொகுதியில் போட்டியிடுவது தோல்வி பயத்திலா ?
பொங்கல் பரிசாக ரூ. 2,500 வழங்குவது குறித்து பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். இது ரங்கராஜன் குழு (கமிட்டி) அறிவித்த பொருளாதார நிலை குறித்த அறிக்கையை ஒட்டி வழங்கப்படுகின்றது. இதில் வேறு எந்த உள் நோக்கமும் கிடையாது. கரோனா பொதுமுடக்கம், மழை, புயல், உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பொதுமக்களின் பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் பொங்கல் பரிசு வழங்கப்படுகின்றது. கடந்தாண்டு ரூ. 1000 வழங்கியுள்ளோம், கரோனா பொதுமுடக்கத்தின்போது ரூ. 1000 வழங்கியுள்ளோம். அதுபோலவே தமிழர் திருநாளாம் பொங்கலை ஒட்டி ரூ. 2,500 தொகை மற்றும் கரும்பு, அரிசி உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளது. ஏற்கெனவே கரோனா பொதுமுடக்க காலத்திலும் 8 மாதங்களாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது, அம்மா உணவகங்களில் இலவசமாக உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆட்சி மக்கள் தேவை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வரும் ஆட்சியாகும். நான் முதல்வராக 3 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றேன். ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே கண்டிப்பாக அதிக்கப்படியான இடங்களில் அதிமுக வெற்றிபெறும். மக்கள்தான் நீதிபதிகள், அவர்கள்தான் வெற்றியை தீர்மானிப்பவர்கள் என்றார்.

சசிகலா விடுதலையான பின்னர் கட்சியில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதில் கூறுகையில், யூகங்களால் எதுவும் கூறக்கூடாது. ஆனால் சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் எந்த மாற்றமும் இருக்காது என்றார்.
பள்ளித்தேர்வுகள் நடத்துவது குறித்து கேட்டபோது, கரோனா தாக்குதல் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனவே பள்ளித்தேர்வுகள் குறித்து பெற்றோருடன் ஆலோசித்து, பின்னர் முடிவு எடுக்கப்படும். இப்போது எதுவும் கூறுவதற்கில்லை என்றார்.

Leave A Reply

Your email address will not be published.