Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எம்ஜிஆர் நினைவு நாள் அன்று ஜெயலலிதா நினைவிடம் திறக்க வாய்ப்பு .

எம்ஜிஆர் நினைவு நாள் அன்று ஜெயலலிதா நினைவிடம் திறக்க வாய்ப்பு .

0

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் அன்று மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் திறக்க வாய்ப்பு. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நினைவிடத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி வருகிற ஜனவரி மாதம் மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் திறக்க வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி ஜெயலலிதா இறந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.

இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டும் பணியை, கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பணிகள் நடந்து வந்த நிலையில், கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திட்டமிட்ட காலத்தில் பணிகள் முடிப்பதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. இருந்தாலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி பணிகளின் முன்னேற்றம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வந்தார்.

இந்தநிலையில் தற்போது நினைவிடம் பணிகள் நிறைவடைந்து உள்ளது. தற்போது நினைவிடம் வளாகத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
மெரினா கடற்கரையில் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த வளாகத்தில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை, கல்வி, சினிமா, அரசியல், பொதுவாழ்க்கை, ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அவர் சாதித்த சாதனைகளை பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சர்வதேச தரத்தில் டிஜிட்டல் முறையில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டு வருகிறது.

மறைந்த அரசியல் தலைவருக்கு சர்வதேச தரத்திலான அருங்காட்சியகம் இந்தியாவிலேயே ஜெயலலிதா நினைவிடத்தில் அமைப்பது தான் முதன் முறையாகும்.

ஜனவரி முதல் வாரத்தில் பணிகளை முடித்து தமிழக அரசிடம் நினைவிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஜனவரி 17-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி ஜெயலலிதா நினைவிடம் திறப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து அரசு முடிவெடுத்து பின்னர் அறிவிக்கும்.
என அதிகாரிகள் கூறியுள்னர்

Leave A Reply

Your email address will not be published.