வட கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் அறிவிப்பு.
வட கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் அறிவிப்பு.
நிவர் புயலானது புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் இரவு 11.30 முதல் 2.30 மணி வரை முழுவதுமாக கரையை கடந்துள்ளது.
இதனால், அதி தீவிர புயலாக இருந்து தீவிர புயலாக வலுவிழந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது. பின்னர் தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தீவிர புயலாக மாறியிருப்பதாகக் கூறப்பட்டது.
இதனிடையே புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நவம்பர் 25 நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், நவம்பர் 26 2.30 மணி வரை முழுவதும் கரையைக் கடந்தது.
வானிலை ஆய்வு மைய தகவல்படி, தற்போது, புயலானது வலுவிழந்துக்கொண்டு வருகிறது.
மேலும், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மைய தெரிவித்துள்ளது.
இதனிடையே இரவு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், புயல் தொடங்கியது முதல் அரசுக்கு மக்கள் முழுமையாக 100 சதவிகிதம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், அவசர கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் தொடரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
36 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதாரங்களை கணக்கீடு செய்து நிவாரணம் மேற்கொள்ளப்படும் என்றும், பயிர் சேதத்திற்கு காப்பீடு, இழப்பீடு பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு வழங்கபடும் என்றும், அமைச்சர் தெரிவித்தார். அதேபோல், மழையினால் உயிரிழப்பு இல்லை என்றும் ஆர்.பி உதயகுமார் குறிப்பிட்டார்.