திமுக பெண் எம்எல்ஏ தற்கொலை முயற்சி!- நெல்லையில் பரபரப்பு-
உட்கட்சி பூசல் காரணமா ?
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற எம்எல்ஏ பூங்கோதை நெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் தற்கொலை முயற்சி செய்ததற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை.
திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா முன்னாள் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். இவர் திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் இருந்து, 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆலங்குளம் தொகுதியில் இருந்து மீண்டும் எம்எல்ஏவாக தேர்வானார். இவரது தந்தை ஆலடி அருணா மூன்று முறை ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து திமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்வானவர்.
திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக எம்எல்ஏ பூங்கோதையின் இந்த முடிவு சலசலப்பை உண்டாக்கியுள்ளது.