திருச்சியின் ரியல் ஹீரோ பற்றி தெரிந்து கொள்வோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பரின் தாயாரின் உடல் தகனம் செய்ய திருச்சி ஓயாமாரி மின் தகன மையம் சென்று இருந்தோம். அப்போது வரிசையாக திருச்சி அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்வதாற்காக காத்து இருந்தன.
அந்த வாகனங்கள் அருகில் இறந்தவர்களின் உறவினர்கள் சோகமாக நின்று இருந்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிறருக்கு நோய் தொற்று ஏற்படாதவாறு பேக்கிங் செய்யப்பட்டு இருந்தது.
அதுபற்றி விசாரித்தபோது அரசு மருத்துவமனையிலிருந்து இதுபோல் பேக் செய்து தருகிறார்கள் என கூறினார்கள், அவர்களிடம் யார் பேக்கிங் செய்வது என விசாரித்தபோது அருகே இருந்த ஒரு நபரை கை காட்டினார்கள்
நமது திருச்சி எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் தனியாக அழைத்து விசாரித்தபோது அவர் தன் பெயர் நாகராஜன் என்றும் 52வது வார்டு துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருவதாகவும் கூறினார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் நோய்த்தொற்று பிரிவில் பணியாற்றி வருகிறார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனை சார்பில் பேக் செய்து ஒப்படைப்பார்கள். அப்படிப்பட்ட உடல்களை உடல் தகனம் செய்ய ஓயாமாரி மின் தகன மையம் வந்து தகனம் முடியும் வரை இருந்து அவரது உறவினர்களுக்கு நோய் பரவாமலும்,அவர்கள் மனம் புண்படாமலும் காரியம் செய்து முடிக்கும் வரை உடன் இருந்து பார்த்துக்கொள்வேன் என்றார்.
மேலும் முக்கியமாக நாய் கடியால் இழந்தவர்களின் உடலை இவரே பேக் செய்து மின் தகன மையம் அவரை வந்து இறுதி காரியம் முடிந்து உறவினர்கள் சென்ற பின்பே செல்வாராம்.
இதைப்போன்று அம்மை நோயினால் இறந்தவர்கள் இரணஜன்னியால் இறந்தவர்கள் உடலையும் இதேபோன்று உறவினர்களுக்கு நோய் பரவாமல் உடல் தகனம் வரை இருந்து காரியம் முடிந்த பின்பே செல்வாராம்.
இதைப்போன்று யாரும் இல்லாத அனாதை உடல்கள் மற்றும் அடையாளம் தெரியாத வகையில் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இறந்தவர்களின் உடல்களையும் சுத்தம் செய்து அடக்கம் செய்து முடிப்பதும் இவர்தான்.
48 வயதான இவர் கடந்த 19 வருடங்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களை (தற்போது கொரோனாவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ) சேவை மனப்பான்மையுடன் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் எனது உயிர் இருக்கும் வரை எனது மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறும் எந்த பணியையும் யார் மனமும் கோணாமல் எனது உயிர் உள்ளவரை இதே பணியை செய்ய கூறினாலும் மகிழ்ச்சியுடன் செய்வேன் எனக் கூறினார்.
இவருக்கு மனைவி,மகள் மற்றும் மகன் உள்ளனர். குடும்பத்தினரும் இவரது பணியை கண்டு தங்களுக்கும் நோய் வரும் என்று அஞ்சவில்லை.
இதுபோன்று வைரஸால் இறந்தவர்களின் உடலை நாங்கள் அடக்கம் செய்தோம், எங்கள் இயக்கம் அடக்கம் செய்தது என போட்டோக்கள் எடுத்து சமூக ஊடங்களில் பரப்பி தங்களை பெரிய சமூக சேவகர்கள் போல் காட்டிக் கொள்பவர்கள் இடையில் எந்தவித விளம்பரம் இல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை சேவை மனப்பான்மையுடன் தகனம் செய்ததுடன் இந்தப் பணியை தொடர்ந்து செய்துவரும் நாகராஜனின் பணியை திருச்சி எக்ஸ்பிரஸ் சார்பில் பாராட்டுகிறோம்.
( எனது படம், பெயர் வேண்டாம் என கூறியும் தங்கள் பணி அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கில் இதை பதிவிடுகிறோம்).
இவரை பாராட்ட நினைப்பவர்கள்
v95435 -76711 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்