திருச்சியில் சிறுவன் கடத்தல் சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது.
திருச்சியில் சிறுவன் கடத்தல் சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது.
திருச்சியில் சிறுவன் கடத்தல் சம்பவத்தில்
தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது.
திருச்சியில் தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய, தலைமறைவாக இருந்த மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையம் அருகேயுள்ள வார்னர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் சுப்ரமணியன். இவரது பேரன் முத்தையா (வயது 12). கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி புதன்கிழமை மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது இச்சிறுவனை மர்ம நபர்கள் சிலர் சேர்ந்து, வாயை மூடி காரில் கடத்தியுள்ளனர். பின்னர் ரூ. 6 கோடி ரொக்கம் கொடுத்தால் சிறுவனை ஒப்படைப்பதகாவும், இல்லையேல் கொன்று விடுவதாகவும் கூறி தொலை பேசியில் மிரட்டியுள்ளனர்.
இது குறித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர போலீசாரின் நடவடிக்கையால் அன்று இரவே சிறுவன் மீட்கப்பட்டார். கடத்தலுக்குப் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர்
இதுதொடர்பாக கண்டோண்மென்ட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கண்டோன்மென்ட் பகுதியில், (தொழிலதிபரின் வீடு மற்றும் கண்டோண்மென்ட் காவல் நிலையம் ஆகியவற்றுக்கு சில மீட்டர்கள் தொலைவில் ) கார் பழுதுநீக்கும் பட்டறை வைத்துள்ள மாணிக்கப்பாண்டியன், அவரது சகோதரன் சரவணன், நண்பர்கள் உறையூரைச் சேர்ந்த செல்வகுமார், சதீஷ்பாபு உள்ளிட்ட சிலர் சேர்ந்து சிறுவனை கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து 4 பேரும் அக்டோபர் 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதில் மேலும் தொடர்புடைய சிலர் தலைமறைவாகினர், அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், மேலும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். மாணிக்கப்பாண்டியனின் நண்பர்களான உறையூர் பாண்ட மங்கலத்தைச் சேர்ந்த திருப்பதி (வயது 26), கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 23), குளித்தலையைச் சேர்ந்த கிஷோர் (வயது 23) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, லால்குடி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கைதான மூவருமே டிப்ளமோ படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தவர்கள். ஏதாவது தொழில் செய்யலாமே என மாணிக்கபாண்டியனிடம் கேட்டபோது, அவரது ஆலோசனைப்படியே சிறுவனை கடத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. திருப்பதி, பிரகாஷ் இருவரும் வேலை இல்லாத நிலையில், ஏற்கெனவே சில சங்கிலிப்பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்களிடமிருந்து சுமார் 10 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாநகரில் சில காவல் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டு கரூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணிக்கபாண்டியன், சரவணன், செல்வகுமார், சதீஷ்பாபு ஆகிய நால்வரையும் காவலில் எடுத்து விசாரிக்க, கண்டோண்மெண்ட் காவல் நிலைய போலீசார் திருச்சி 2 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். அந்த மனு விசாரணைக்கு வந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில், 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்.