கொடைக்கானலை சுற்றிப் பார்க்க தனியார் ஹெலிகாப்டர் சேவை ஆரம்பம்
கொடைக்கானலை சுற்றிப் பார்க்க தனியார் ஹெலிகாப்டர் சேவை ஆரம்பம்
மத்திய அரசு அனுமதியுடன் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்ப்பதற்காக தனியார் நிறுவனம் ஹெலிகாப்டர் சேவை இயக்கப்பட்டுள்ளது.
உலக சுற்றுலா தலங்களில் ஒன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இங்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்தும் அதேபோல் வெளிநாடுகளிலிருந்தும் வருடம் தோறும் கொடைக்கானலில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
கொடைக்கானலில் முகப்பிலேயே சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் வெள்ளி நீர்வீழ்ச்சி நகர் பகுதியில் ஆறு கிலோமீட்டர் சுற்றளவுள்ள நட்சத்திர ஏரி பூங்கா மற்றும் கொடைக்கானலில் இருந்து 2000 அடி கீழே உள்ள தேனி பெரியகுளம் போன்ற நகரங்களை பார்வையிடுவதற்கும் அதில் நடந்து சென்று கொண்டே பார்ப்பதற்கும் கோக்கர்ஸ் வாக் மற்றும் தூண் பாறை, பேரிஜம் ஏரி இப்படி பல்வேறு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலாத்தலங்கள் அமையப்பெற்றது.
இதுமட்டுமல்லாமல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளதால் கொடைக்கானல் நகர் மட்டுமல்லாமல் கீழ் மலைமேல் மலை போன்ற பகுதிகளில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல் மலைகளை சுற்றி ஏராளமான அணைகளும் அதேபோல் பசுமை புல்வெளிகள் அடர்ந்த வனங்களும் அதேபோல் யானை, சிறுத்தை, காட்டெருமை, புலி, சிங்கம், வால் குரங்கு என பல்வேறு வகையான வன விலங்குகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ளது.
இதையெல்லாம் காண்பதற்காக தற்போது தனியார் விமான சேவை நிறுவனம் ஒன்று கோவையிலிருந்து வாரம் மூன்று நாட்கள் திங்கள் செவ்வாய் புதன் 3 நாட்கள் ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலா தலங்களையும் மற்றும் ஹெலிகாப்டர் மேலே இருந்து மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் பார்வையிடுவதற்கு தற்போது இன்று ஹெலிகாப்டர் சேவை முன்னோட்டம் நடைபெற்றது.
இதில் கோவையில் இருந்து இரண்டு நபர்கள் கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டரில் வந்தனர். மேலும் ஹெலிகாப்டர் மூலம் கோவையிலிருந்து சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்கு கட்டணமாக நபர் ஒருவருக்கு 6 ஆயிரம் ரூபாய் கட்டணமும், திருமணம் முடிந்து தேனிலவுக்கு ஜோடிகளாக வரும் நபர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரிலிருந்து படம் எடுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் 6 இருக்கைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது.