இதை கவனித்தீர்களா? ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்!
Whatsapp Call Recording Tamil News: தகவல் பரிமாற்றத்தில் இந்தியாவில் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். இந்த செயலியில் குறுஞ்செய்தி அனுப்புவது மட்டுமல்லாமல், ஆடியோ அழைப்புகளும் செய்யலாம். வாட்ஸ்அப்பில் அழைப்பு அம்சம் இருப்பது மிகவும் சிறப்பானது என்றாலும், அந்த அழைப்புகளைப் பதிவு செய்ய முடியவில்லை என்பது பலருக்கு மிகப் பெரிய குறை.
இனி கவலை வேண்டாம். வாட்ஸ்அப் அழைப்புகளை எவ்வாறு பதிவு செய்வது என்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.
முறை 1: வேறொரு சாதனத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் ஆடியோ அழைப்புகளை எவ்வாறு பதிவு செய்வது
இதனைச் செய்ய ஓர் எளிய வழி உள்ளது. உங்கள் தொலைபேசியை ஸ்பீக்கரில் வைத்து, மற்றொரு சாதனத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் அழைப்பைப் பதிவு செய்யலாம். இரண்டாவது கைபேசியில் ரெக்கார்டர் இல்லை என்றால், நீங்கள் பிளே ஸ்டோரிலிருந்து மூன்றாம் தரப்பு செயலியைப் பதிவிறக்க வேண்டும். இதற்கு, “வாய்ஸ் ரெக்கார்டர்” எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.
நீங்கள் எந்த தகவலையும் இழக்க விரும்பாமல் அதேநேரத்தில் குறிப்புகளை எடுக்க விரும்பினால், உங்கள் லேப்டாப் அல்லது வேறு எந்தவொரு இரண்டாம் சாதனத்திலும் Otter.ai செயலியைப் பதிவிறக்கலாம். இந்த செயலி நிகழ் நேர அடிப்படையில் தானியங்கி டிரான்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது. எனவே, அழைப்பைப் பெற்ற பிறகு, நீங்கள் “பதிவு” பட்டனை அழுத்தினால், உங்கள் உரையாடலைப் பதிவுசெய்ய இந்த செயலி தொடங்கும். இதிலிருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால், ஆடியோ டிரான்ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட உரையுடன் ஒத்திசைக்கப்படுவதுதான். அதாவது, ஒரே நேரத்தில் வாய்ஸ் அழைப்பு பதிவு மற்றும் அதன் உரை பதிப்பு இரண்டையும் பெற முடியும். இந்த செயலி ஆங்கில மொழியை மட்டுமே ஆதரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், ஒவ்வொரு மாதமும், வாய்ஸ் உரையாடல்களைப் பதிவுசெய்ய 600 நிமிடங்கள் இலவசமாகப் பெறுவீர்கள்.
முறை 2: ஒரே தொலைபேசியில் வாட்ஸ்அப் அழைப்புகளை எவ்வாறு பதிவு செய்வது
நீங்கள் சாதாரண வாட்ஸ்அப் அழைப்புகளைப் பதிவு செய்ய விரும்பினால், அதற்காகக் கூகுள் பிளே ஸ்டோரில் கால் ரெக்கார்டிங் செயலிகள் உள்ளன. அவற்றில் சில வேலை செய்கின்றன, சில பயன்படாது. “ரெக்கார்ட் வாட்ஸ்அப் அழைப்புகள் (Record WhatsApp calls)” பிளே ஸ்டோரில் உள்ள சிறந்த வாட்ஸ்அப் அழைப்பு பதிவு செயல்பாடுகளில் ஒன்று. இது ஓர் எளிய UI-ஐக் கொண்டுள்ளது, அதனால் இதனைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. இந்த செயலி தானாகவே உங்கள் வாட்ஸ்அப் அழைப்புகளைப் பதிவுசெய்கிறது. மேலும், ஆடியோ ஃபைல்களை கூகுள் ட்ரைவில் பதிவேற்றலாம். கைரேகை அல்லது ‘பின் லாக்’ அமைக்க அனுமதி உண்டு. இதன்மூலம், நீங்கள் மட்டுமே பதிவுகளை அணுக முடியும்.
இந்த குறிப்பிட்ட செயலியைப் பயன்படுத்தி நீங்கள் வாட்ஸ்அப் அழைப்புகளை எவ்வாறு பதிவு செய்யலாம் என்பதை இனி பார்ப்போம்.
ஸ்டெப் 1: கூகுள் பிளே ஸ்டோரைத் திறந்து, “Record WhatsApp calls” செயலியை நிறுவவும்.
ஸ்டெப் 2: அழைப்புகள், தொடர்புகள், சேமிப்பிடம், மைக்ரோஃபோன் மற்றும் பிறவற்றை அணுக அனுமதி கேட்கப்படும். நீங்கள் திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் போதுமானது.
ஸ்டெப் 3: செட்டிங்கில் உள்ள “அறிவிப்பு” மற்றும் “அணுகல்” பிரிவுகளிலும் பயன்பாட்டை இயலச் செய்ய வேண்டும். பயன்பாட்டிற்கு அனுமதிகளை வழங்கிய பிறகு, செயலியை உபயோகப்படுத்தலாம். உங்களுக்கு அழைப்பு வரும்போதோ அல்லது நீங்கள் அழைப்பு விடுக்கும்போதோ, இந்த செயலி தானாகவே அழைப்பைப் பதிவுசெய்யத் தொடங்கும். இதற்கென்று எந்த கால அவகாசமும் இல்லை. மேலும், எப்போது வேண்டுமானாலும் இந்தப் பதிவுகளை இயக்கலாம். ஆனால், அவ்வப்போது தவிர்க்கமுடியாத விளம்பரங்கள் தோன்றும்.
எச்சரிக்கை: வாட்ஸ்அப், end-to-end செய்திப் பரிமாற்ற சேவை. எனவே, மற்றொரு பயன்பாட்டிற்கு அணுகலை வழங்கும்போது, அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். மூன்றாம் தரப்பு செயலிகள் உங்கள் அழைப்பின் முடிவில் ஆடியோவை பதிவு செய்யும் போது, பிற பயன்பாடுகளுக்கான அணுகலைக் கொண்ட இதுபோன்ற செயலிகளைப் பயன்படுத்தும் போது கவனமாக இருப்பது நல்லது. உதாரணமாக, சாண்ட்பாக்ஸ் செயலியான iOS-ல் இதுபோன்ற அம்சத்தை இயக்க முடியாது.