தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா ? பெற்றோர், தலைமையாசிரியர் கருத்து
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா ? பெற்றோர், தலைமையாசிரியர் கருத்து
நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாக பரவி வந்ததால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் கடந்த ஏழு மாதங்களாக மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் படிப்படியாக கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகளை திறக்கலாம் என்று அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் அக்டோபர் 31ஆம் தேதிவரை பள்ளிகள் திறக்கப்படாது என்றும் கரோனா தாக்கம் குறைந்த பின்னர்தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்காமல் இருப்பதே நல்லது என்கின்றனர் மாணவர்களின் பெற்றோர்கள், “அரசு பள்ளிகளை திறந்தாலும் எந்தளவிற்கு மாணவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் என்ற சாத்தியமில்லை.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்தால் நோய்ப்பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு ஆன்லைன் வகுப்பு மூலமாகவே நடத்த வேண்டும்.
டிசம்பரில் பள்ளி திறந்தாலும் மூன்று மாதங்களில் பாடத்திட்டங்களை முடிப்பது என்பது இயலாத காரியம். பாடத்திட்டங்களை குறைப்பதாக கூறினாலும் மூன்று மாதங்களில் ஒன்றுமே செய்ய முடியாது. இந்த பாடத்திட்டத்தில் மாணவர்கள் படித்து போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படும்.
பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவது இயல்பான சூழலாக இருக்காது. பயந்து பயந்துதான் பள்ளிக்கு அனுப்பும் நிலை ஏற்படும். ஆன்லைன் வகுப்பு பழக்கம் வந்தபிறகு மாணவர்களுக்கு எழுதும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது.
குழந்தைகள் மத்தியில் தகுந்த இடைவெளி கடைப்பிடித்தல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற பழக்கங்களை ஆசிரியர்கள் தெரிவித்தாலும், அதனை அவர்கள் பின்பற்றுவது கடினம்” என்று கூறுகின்றனர்.
இதுகுறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறும்போது. “கரோனா தொற்று அனைவரின் சூழ்நிலையையும் மாற்றி உள்ளது. பள்ளிகள் திறந்தால் தலைமை ஆசிரியராக எங்களது கடமைகள் அதிகரித்துள்ளன. பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
குழந்தைகளை தனித்தனியாக அமர வைக்க வேண்டும். அது சாத்தியமற்றது. மாணவர்கள் பாடங்களை எப்போது வேண்டுமானாலும் படித்துக்கொள்வார்கள். ஆனால் குழந்தைகளின் உயிர் முக்கியம். இத்தகைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படுவது அனைத்து தரப்பினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும்” என்றார்.