தமிழில் கையொப்பம் இடம் பெற்ற முதல் இந்திய நாணயம் அண்ணாவின் நினைவு நாணயம்.
தமிழில் கையொப்பம் இடம் பெற்ற முதல் இந்திய நாணயம் அண்ணாவின் நினைவு நாணயம்.
இந்திய நாணயங்களில் தமிழ் மொழியில் கையொப்பம் இடம் பெற்ற முதல் நாணயம் பேரறிஞர் அண்ணா நினைவு நாணயம்
இந்திய நாணயங்களில் தமிழ் மொழியில் கையொப்பம் இடம் பெற்ற முதல் நாணயம் பேரறிஞர் அண்ணா நினைவார்த்த நாணயம் ஆகும்.
இது குறித்து நாணயவியல் சேகரிப்பாளரும், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனர் மற்றும் தலைவருமான யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
குடியரசு இந்தியா வெளியிட்ட நாணயங்களில் தமிழ் மொழியில் கையொப்பமிட்டு வெளிப்புறம் பேரறிஞர் அண்ணா நினைவு நாணயம் ஆகும்.
காஞ்சிபுரத்தில் நெசவுக்குடும்பத்தில் பிறந்தவர் அண்ணா. குடும்ப ஏழ்மைக்காரணமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் பிற்படுத்தப் பட்டோருக்கான கோட்டாவில் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ., எம்.ஏ. என இரண்டு பட்டங்களை பெற்று ஆங்கிலத்தில் புலமையடைந்தார்.
கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியராக பணியை தொடங்கிய அண்ணாவுக்கு, பெரியாரின் சுயமரியாதை கொள்கைகள், கோட்பாடுகள் மீது ஈர்ப்பு வந்தன. அவரை சந்திக்க விரும்பிய அண்ணாவுக்கு திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் இளைஞர் மாநாடு வழி வகுத்து தந்தது. அங்கு வைத்து முதன்முறையாக பெரியாரை சந்தித்த அண்ணா, தனது பொதுவாழ்வு விருப்பத்தை பெரியாருடன் கூறி அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.
1937-ம் ஆண்டு ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழுக்காக சிறை சென்றார். இந்தியா சுதந்திரம் பெற்ற போது அதனை விமர்சித்து துக்க நாளாக கடைபிடிக்கும்படி கூறினார் பெரியார். அதில் அண்ணாவுக்கு உடன்பாடில்லை. மேலும், பெரியாருக்கு தேர்தல் அரசியலில் ஈடுபாடு இல்லாததை உணர்ந்த அண்ணா, பின்னாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார்.
1962-ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, நாடாளுமன்றத்தில் தனது பேச்சின் மூலம் அகில இந்திய தலைவர்களின் கவனத்தை பெற்றார். அண்ணாவின் ஆங்கில புலமை, ஆணித்தரமான வாதங்களை முன் வைத்து பேசினார்.
1967-ல் திமுக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா ஒரு மனதாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் தமிழ் பரப்பும் பணிகளை தொடங்கிய அண்ணா எண்ணற்ற சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தார். எழுத்துநடை சீர்த்திருத்தத்துக்கு உதாரணமாக கூறவேண்டும் என்றால் உற்சவம் என்ற வார்த்தையை திருவிழா என்றும், ருசி என்ற வார்த்தையை சுவை எனவும் மாற்றியதை கூறலாம். இப்படி எண்ணற்ற மொழி சீர்த்திருத்தம் அண்ணா காலத்தில் நடைபெற்றது.
மதராஸ் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றினார், பேருந்துகளை நாட்டுடைமையாக்கினார், சுயமரியாதை திருமணச் சட்டத்தை கொண்டு வந்தார், தமிழறிஞர்களை எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு சிலைகள் நிறுவினார், எங்கும் எதிலும் தமிழுக்கு முதலிடம் தந்தார், எண்ணற்ற படங்களுக்கு கதை, வசனம், எழுதியுள்ளார்.
எளிமை
குட்டை உருவம், கலைந்த தலைமுடி, கசங்கிய வேட்டி சட்டை, கரகரத்த குரல்.இவைகள் தான் அண்ணாவின் அடையாளங்கள். அண்ணாவின் எளிய தோற்றமும்,பேச்சும், பண்பும் மக்களின் மனங்களை கவர்ந்தது.
தன் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் புற்றுநோயால் 1969 பிப்ரவரி 3-ம் தேதி மறைந்தார்.
அண்ணா நூற்றாண்டு பிறந்த ஆண்டை நினைவு கூறும் வகையில் பேரறிஞர் அண்ணா உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயங்களை இந்திய அரசு வெளியிட்டது.
அண்ணா நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட அவரது உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் வெளியிட்டது.
இந்த நாணயத்தின் விட்டம் 23 மி.மீ. இருக்கும். விளிம்பு பற்களின் எண்ணிக்கை 100 இருக்கும். இதில் செப்பு 75 சதவீதமும், துத்தநாகம் 20 சதவீதமும், நிக்கல் 5 சதவீதமும் சேர்க்கப்பட்டுள்ளது. முன்புறம் அசோக தூணின் சிங்க முகமும், அதற்கு கீழ் சத்யமேவ ஜெயதே என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
இடது மேற்புறத்தில் பாரத் என்று இந்தியிலும், வலது மேல் புறத்தில் இந்தியா என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். நாணயத்தின் சிங்கமுக பகுதியின் கீழ் புறத்தின் இடது பக்கத்தில் ரூபியா என்று இந்தியிலும், கீழ் புறத்தின் வலது பக்கத்தில் ரூபாய் என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
பின் புறத்தின் மைய பகுதியில் அண்ணா உருவமும், பேரறிஞர் அண்ணா என்றும் பொறிக்கப்பட்டிருக்கும். இடது புறத்தில் இந்தியிலும், வலது புறத்தில் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். காலம் 1909-1969 என்பது கீழே குறிக்கப்பட்டிருக்கும். மற்றும் அவரின் தமிழ் மொழியில் கையொப்பமும் குறிக்கப்பட்டிருக்கும். இந்திய அரசு வெளியிட்ட நாணயங்களில் தமிழ் மொழியில் கையெழுத்து இடம் பெற்றது பேரறிஞர் அண்ணா நினைவார்த்த நாணயம் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.