திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 11வது தெருவில் வசித்து வருபவர் துரைராஜ் (வயது 55). நெடுஞ்சாலைத் துறை அதிகாரி.
இவர் கடந்த 14ஆம் தேதி பொங்கல் விழாவை கொண்டாட குடும்பத்துடன் பெரம்பலூர் சென்று விட்டு நேற்று இரவு 8 மணிக்கு மீண்டும் தங்களுடைய வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டில் சென்று பார்த்தபோது பீரோ, படுக்கை அறை, சமையல் அறை உள்ளிட்ட இடங்களில் இருந்த பொருட்கள் எல்லாம் கலைத்து போடப்பட்டு இருந்தது.
மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் நகை 30 ஆயிரம் ரூபாய் பணம், சமையல் அறையில் வைத்திருந்த 3 கிலோ வெள்ளி பொருட்கள், 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் அனைத்தையும் கொள்ளையர்கள் அள்ளிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியோடு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் குற்றவாளிகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.