அயோத்தியில் ராமர் பிறந்த இடமான ராம ஜென்மபூமி மீது பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் உரிமை கொண்டாடின. பல ஆண்டுகளாக நடந்த வழக்கில் அந்த இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதையடுத்து அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதுபோல், உத்தரபிரதேசத்தில் உள்ள மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடமான கிருஷ்ண ஜென்மபூமி மீது பா.ஜனதா குறிவைத்துள்ளது. கிருஷ்ண ஜென்மபூமி அருகே மசூதிகள் அமைந்துள்ளன. அந்த மசூதி நிலம் இந்துக்களுக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடி, பல்வேறு இந்து அமைப்புகள் ஏற்கனவே மனு அளித்துள்ளன.
இந்தநிலையில், ராம ஜென்மபூமியை தொடர்ந்து, பா.ஜனதாவின் செயல்திட்டத்தில் மதுரா இடம்பெற்று இருப்பதாக உத்தரபிரதேச மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டப்படும் நிைலயில், அடுத்த நடவடிக்கை, மதுராதான். ராமர் புகழ் வாழ்க. ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா.’’ என்று அவர் கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், அவரது கருத்து அரசியல்ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.