என்னைப்போல் யாரும் குடிகாரன் ஆகிவிடாதீர்கள் – மதுவுக்கு அடிமையான இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை.
திருச்சியில் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, மீள முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக 2 பக்கம் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு மின்வாரிய ஊழியர் விஷம் குடித்து இறந்துள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டு அருகே அய்யம்பட்டி வல்லாளகண்டன் அய்யனார் நகரை சேர்ந்த சரவணன்.
இவரது மகன் இளையராஜா
(வயது 32).தமிழ்நாடு மின்சார வாரியத்தில் விஜிலன்ஸ் பிரிவு உதவியாளராக பணி புரிந்து வந்தார்.
இவரது தாய், தந்தை, அண்ணன் மூவரும் இறந்து விட்டனர்.
இளையராஜா திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்துள்ளார்.தனிமையில் இருந்த இளையராஜாவுக்கு மதுப்பழக்கம் அதிகமாக இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் திருச்சி இரட்டைவாய்க்கால் பகுதியில் உள்ள சித்தப்பா செந்தில்குமார் என்பவருக்கு வீடியோகால் மூலம் செல்போனில் பேசியுள்ளார்.
அதில் அப்பா, அம்மா எல்லாரிடமும் சகஜமாக பேசாமல் தாழ்வு மனப்பான்மையுடன் நான் இருந்து விட்டேன்.
இவ்வளவு நாளாக அது தெரியவில்லை
.இப்பொழுது தெரிந்து கொள்கிறேன். ஆனாலும் வாழ விரும்பவில்லை.. பாய்.. அப்பா, அம்மா, தங்கை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து தான் விஷம் கலந்த மதுவை குடித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அந்த வீடியோ காலில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இளையராஜாவின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் நேற்று மதியம் 1.45 மணிக்கு இளையராஜாவின் நண்பர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர்.
உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, இளையராஜா மதுவோடு விஷம் கலந்து குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.
அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இளையராஜா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து இளையராஜாவின் தம்பி தமிழ்ச்செல்வன் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், இளையராஜா இறப்பதற்கு முன்பு இரண்டு பக்க கடிதம் ஒன்றை உருக்கமாக எழுதியுள்ளார்.அதில்,தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாகவும் அந்த குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. அதனால் அப்பா, அம்மா, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்னை மன்னித்து விடுங்கள். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் சாவிற்கு முழு காரணம் எனது குடிப் பழக்கம் தான். இது தனது சுய சிந்தனையுடன் எழுதுவதாகவும் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
என்னைப் போல் யாரும் குடிகாரர்கள் ஆகிவிடாதீர்கள். குடி ஒருவன் வாழ்க்கையை எப்படி எல்லாம் மாற்றும் என்பதை நான் தெரிந்து கொண்டேன். ஆனால் என்னால் குடியை விட முடியவில்லை. கடைசியாக குடிக்கிறேன். விஷம் கலந்து குடித்தே பிரிகிறேன் உங்கள் எல்லோரையும் விட்டு. அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் உங்களுக்கு மீண்டும் மகனாக பிறக்கிறேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை.
தான் ஒருவரிடம் ₹ 40 ஆயிரமும் ஒருவரிடம் ₹ 30 ஆயிரம் கடன் வாங்கி உள்ளதாக அவர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜா ஒருவருக்கு ₹ 2 லட்ச கடன் கொடுத்துள்ளதாகவும் அந்த பணத்தை வாங்கி தான் பெற்ற கடன் வாங்கியவர்களிடம் கொடுத்து விடவும் என்றும் அந்த நபரின் பெயரையும் குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.
(மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)