தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் தொண்டாற்றும் சமூக செயற்பாட்டாளர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாநகரம், புத்தூர் பகுதியில் வசித்து வரும் யோகா ஆசிரியர் பெ. விஜயகுமார், இலக்கியம், தமிழ் மொழி வளர்ச்சி, நூலகப் பணி, தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு, யோகக்கலை விழிப்புணர்வு, மனிதநேயச் சேவை எனப் பல்வேறு தளங்களில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் பன்முக ஆளுமையாவார். இலக்கிய உலகில் ‘வெற்றிச்செல்வன்’ என்ற புனைப்பெயராலும் அறியப்படுபவர்
அறிவையும் அறத்தையும் சமூகத்திற்குக் கொண்டு சேர்க்கும் ஓர் உயரிய பொதுநலப் பணியாகக் கருதி செயல்பட்டு வருகிறார்.
கவிதை, கட்டுரை,யோகக்கலை, ஆன்மிகம், இயற்கை வாழ்வியல், மனிதநேயம், சமூக விழிப்புணர்வு, வரலாறு, பண்பாடு, இலக்கிய ஆர்வலர்கள், அமைப்புகளை ஆவணப்படுத்தல் எனப் பல்வேறு பொருண்மைகளில் நூல்களையும் கையேடுகளையும் வெளியிட்டுள்ளார்.
இவரது இலக்கியப் படைப்புகளிலும் தொகுப்புகளிலும் ‘சந்திப்போம் சிந்திப்போம்’ கவிதை நூல், ‘கதம்பக் கையேடு’, ‘நட்பும் நவநாகரிகமும்’, ‘விழுதுகள்’, ‘அன்னை தெரசா’, ‘யோகா விழிப்புணர்வு’, ‘பொன்விழா இந்தியா’, ‘சாதிகள் இல்லையடி பாப்பா’, ‘கவிஞர் நெஞ்சில் ராசவேலு’, ‘சூரிய நமஸ்காரம்’, ‘அக்னி கோத்திரம்’, ‘கிரியா’, ‘இனிமா சிகரம்’, ‘பிராணாயாமம்’, ‘தேனும் பயணமும்’, ‘ரெய்க்கி பந்தங்கள்’, ‘யோகாசனங்கள் பயிற்சிகளும் பயன்களும்’, ‘ருத்ராட்சம்’, ‘சிவநெறிச்செல்வர் சிவஸ்ரீதரன்’, ‘தியானம்’, ‘முத்திரைகள்’, ‘இயற்கை மருத்துவமும் யோகாவும்’, ‘மண் சிகிச்சை’, ‘வாழை இலைக் குளியல்’, ‘நீர் மருத்துவம்’, ‘உடல் உறுப்பு தானம்’, ‘உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்’, ‘மண்ணில் புதைப்பதை மனிதநூல் விதைப்போம்’, ‘படமாய் இருப்பதை விட பாடமாய் இருப்போம்’, ‘காய்கறிச் சாறும் மருத்துவப் பயன்களும்’, ‘பழச்சாறு பயன்களும்’, ‘மூலிகைச் சாறும் பயன்களும்’, ‘பாத நுண்ணழுத்தச் சிகிச்சை’, ‘எண்ணெய் கொப்பளிப்பு மருத்துவம்’, ‘சாதனை சகோதரிகள்’, ‘சாதனை மனிதர்கள்’, ‘அஷ்டாங்க யோகம்’, ‘இயற்கை உணவுகள்’, ‘தமிழர் பண்டைய புழங்குபொருட்கள்’, ‘திருச்சிராப்பள்ளி எழுத்தாளர்கள்’, ‘திருச்சிராப்பள்ளி மாவட்ட இலக்கிய அமைப்புகள் வரலாறு’, ‘திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள்’, ‘திருச்சி பெண் எழுத்தாளர்கள்’ உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நூல்களையும் கையேடுகளையும் உருவாக்கி வெளியிட்டுள்ளார்.
இவரது எழுத்துப் பணி மனித வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் தொடுகிறது. உடல்நலம், மனநலம், யோகா, இயற்கை மருத்துவம், சமூகப் பொறுப்பு, பெண்களின் சாதனைகள், தமிழ் இலக்கியம், உள்ளூர் வரலாறு, பண்பாட்டுச் சுவடுகள் ஆகியவற்றை எழுத்தின் வழியாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதே இவரது படைப்புப் பணியின் அடிப்படை நோக்கமாக விளங்குகிறது.
தமிழ் மொழியின் செழுமையையும் அறிவுச் செல்வத்தையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், 1995 ஆம் ஆண்டு முதல் தனது இல்லத்திலேயே இலவச நூலகத்தை நிறுவி தொடர்ந்து பராமரித்து வருகிறார்.
பொருளாதார வசதியின்மையால் யாரும் அறிவைப் பெறுவதில் பின்தங்கிவிடக் கூடாது என்ற சமூக அக்கறையுடன், பொதுமக்கள் இலவசமாக நூல்களைப் படித்துப் பயன்பெறும் வகையில் இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது. தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு, அறிவியல், பண்பாடு, மருத்துவம், ஆன்மிகம், யோகா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த நூல்களைப் பாதுகாத்து வருவது இவரது அறிவுப் பாதுகாப்புப் பணியின் சிறப்பம்சமாகும்.
வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதோடு, நூல்களைப் பாதுகாப்பதும், அவற்றின் வழியாக அறிவைப் பகிர்வதும் சமூகத்தின் எதிர்காலத்திற்கான முதலீடு என்ற சிந்தனையில் தனது இல்லத்தையே அறிவுக் கருவூலமாக மாற்றியுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையையும் முன்னோர் பயன்படுத்திய அன்றாடப் பொருட்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தனது இல்லத்தில் தமிழர் வாழ்வியல் புழங்குபொருட்கள் காட்சியகத்தையும் அமைத்துள்ளார்.
முன்னோர் பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அளவைக் கருவிகள், விளையாட்டுப் பொருட்கள், பழங்காலப் பொருட்கள், நாணயங்கள், அஞ்சல் தலைகள் உள்ளிட்ட வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சேகரிப்புகளைப் பாதுகாத்து காட்சிப்படுத்தி வருகிறார்.
இவை வெறும் பழைய பொருட்கள் அல்ல; ஒரு தலைமுறையின் வாழ்க்கை முறை, தொழில்நுட்ப அறிவு, குடும்ப உறவுகள், பண்பாட்டு அடையாளங்கள், சமூக மாற்றங்கள் ஆகியவற்றைப் பேசும் வரலாற்று ஆவணங்கள் என்பதை உணர்த்தும் வகையில் இவரது சேகரிப்புப் பணி அமைந்துள்ளது.
வரலாற்று ஆய்வுகளின் முக்கியத்துவத்தைப் பொதுமக்களிடம் எடுத்துரைப்பதுடன், இளைய தலைமுறையினர் தமது பாரம்பரியத்தை அறிந்து பெருமிதம் கொள்ளும் வகையில் இப்பணியை முன்னெடுத்து வருகிறார்.
யோகா ஆசிரியராகப் பணியாற்றி வரும் பெ. விஜயகுமார், உடல் நலத்திற்கும் மன அமைதிக்கும் யோகக்கலை அவசியம் என்பதைப் பொதுமக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
யோகாசனங்கள், பிராணாயாமம், தியானம், சூரிய நமஸ்காரம், முத்திரைகள், அஷ்டாங்க யோகம் உள்ளிட்ட பயிற்சிகளின் பயன்களை நூல்கள், கையேடுகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக எடுத்துரைத்து வருகிறார்.
இயற்கை வாழ்வியல், உடல் நலன், மன அமைதி, ஒழுக்கமான வாழ்வியல் ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்க வேண்டும் என்பதே இவரது பணியின் நோக்கமாகும்.
யோகக்கலையை ஒரு உடற்பயிற்சியாக மட்டுமல்லாமல், மனிதனின் உடல், மனம், சிந்தனை, ஒழுக்கம் ஆகியவற்றை மேம்படுத்தும் வாழ்வியல் நெறியாகக் கருதி செயல்பட்டு வருகிறார்.
சமூகத்தில் வீடற்ற வறியவர்கள் வறுமையாலும் ஆதரவின்மையாலும் உணவின்றித் தவிக்கும் மக்களின் துயரத்தை உணர்ந்து, தினந்தோறும் அன்னதானப் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.வீடற்றவர்கள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள், உழைக்க இயலாதவர்கள் மற்றும் உணவுத் தேவையுடையவர்களுக்கு உணவு வழங்குவதைத் தனது வாழ்வின் முக்கியமான சேவையாகக் கருதி செயல்பட்டு வருகிறார்.
பசியைப் போக்குவது என்பது வெறும் உணவு வழங்குவது மட்டுமல்ல; சக மனிதனின் வாழ்வுரிமையையும் மனித மாண்பையும் மதிப்பதாகும் என்ற உயரிய சிந்தனையுடன் இப்பணியைத் தொடர்கிறார். மேலும்,
உற்றார்,உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள், அடையாளம் தெரியாதவர்கள், ஆதரவற்ற நிலையில் உயிரிழந்தவர்கள், பெயர் விலாசம் தெரியாதவர்கள் ஆகியோரின் உடல்களை சம்பந்தப்பட்ட சரக காவல்துறை காவலர்கள் வழங்கும் தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவலர்களின் முன்னிலையில் உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்யும் மனிதநேயப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல, உயிரிழந்த பின்னரும் ஒவ்வொரு மனிதருக்கும் கண்ணியமும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்ற உயரிய மனிதநேயக் கொள்கையைச் செயல்பாட்டில் வெளிப்படுத்தி வருகிறார்.
சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து மறையும் மனிதர்களுக்கும் இறுதி மரியாதை கிடைக்க வேண்டும் என்ற இவரது அர்ப்பணிப்பு, மனிதநேயத்தின் உன்னத அடையாளமாகத் திகழ்கிறது.
இந்தச் சிறப்புமிக்க மனிதநேயச் சேவையைப் பாராட்டி தமிழ்நாடு ஆளுநரின் விருதைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
உயிரைக் காப்பாற்றுவதில் குருதிக்கொடையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இதுவரை 26 முறை குருதிக்கொடை வழங்கியுள்ளார். பிறர் உயிர் காக்கத் தனது குருதியை வழங்குவதை உயரிய சமூகப் பொறுப்பாகக் கருதி செயல்பட்டுள்ளார்.
மேலும், நான்கு ஜோடி கண்களைத் தானமாகப் பெற்று கண் வங்கிக்கு வழங்குவதற்கான பணியிலும் ஈடுபட்டுள்ளார். மருத்துவக் கல்லூரிக்கு மறைந்த ஒருவரின் உடலை குடும்பத்தினரின் ஒப்புதலுடன் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குவதற்கான பணியிலும் ஈடுபட்டு உள்ளார்.இதன் மூலம் பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் கண்தானத்தின் மகத்துவத்தை எடுத்துரைத்து வருகிறார்.
குருதிக்கொடை, கண்தானம், உடலுறுப்பு தானம், உடல்தானம் போன்ற உயிர்காக்கும் தானங்களின் அவசியத்தைத் தனது எழுத்துகள் மற்றும் சமூகத் தொடர்புகள் வாயிலாக மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.
‘படமாய் இருப்பதை விட பாடமாய் இருப்போம்’ என்ற உயரிய சிந்தனையைத் தனது வாழ்வின் கொள்கையாகக் கொண்டுள்ளார்.தனது வாழ்நாளுக்குப் பின்னரும் மருத்துவக் கல்விக்கும் அறிவியல் ஆய்வுகளுக்கும் பயன்படும் வகையில் உடல்தானம் செய்யப் பதிவு செய்துள்ளார்.
உள்ளூர் இலக்கிய வரலாற்றைப் பாதுகாப்பதும், எழுத்தாளர்களின் பங்களிப்புகளை ஆவணப்படுத்துவதும் மிக முக்கியமான பணியென திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் இலக்கியச் சூழலைப் பதிவு செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு
‘திருச்சிராப்பள்ளி மாவட்ட எழுத்தாளர்கள்’, ‘திருச்சிராப்பள்ளி மாவட்ட இலக்கிய அமைப்புகள் வரலாறு’, ‘திருச்சி பெண் எழுத்தாளர்கள்’, ‘திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள்’ போன்ற நூல்களின் வழியாக மாவட்டத்தின் இலக்கிய ஆளுமைகள், இலக்கிய அமைப்புகள், படைப்பாளர்கள், பெண்களின் இலக்கியப் பங்களிப்புகள் மற்றும் சேகரிப்புக் கலையின் தனித்துவங்களை ஆவணப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, மாவட்டத்தின் இலக்கிய அமைப்புகளின் வரலாற்றைத் தொகுத்து வெளியிடுவது என்பது எதிர்கால ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் பயனளிக்கும் வரலாற்றுப் பணியாகும்.
ஒரு தனிமனிதரின் முயற்சியால் அறிவு, பண்பாடு, இலக்கியம், மனிதநேயம் ஆகியவற்றை எவ்வாறு சமூகத்திற்கான சேவையாக மாற்ற முடியும் என்பதற்கு இவரது வாழ்வும் பணிகளும் எடுத்துக்காட்டாக அமைகின்றன.

