குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ ரூ.35-க்கு இன்று முதல் விற்பனை :
திருச்சி ரேஷன் கடைகளில் தரமான வெங்காயமாக வழங்க பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை .
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மொத்த காய்கறி சந்தைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரையிலும், சில்லறை விற்பனையில் ரூ.80-ஐ கடந்தும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.
இதையடுத்து, மத்திய அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் வெங்காயம், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த வெங்காயத்தை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம் சந்தை விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் செயல்படும் நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு இன்று முதல் செயல்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக, தமிழகம் முழுவதும் 8,233 நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மூலம் சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு குடும்ப அட்டைக்கு அதிகபட்சம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் வழங்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் உள்ள கூட்டுறவு பண்டகசாலைகள், பிரதான கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் அமுதம் அங்காடிகளிலும் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் 1,234 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், முதற்கட்டமாக திருச்சி மாநகரப் பகுதியில் 900 ரேஷன் கார்டுகளுக்கும் குறைவாக உள்ள 150-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளில் வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்த வகையில், திருச்சி சிந்தாமணி, உறையூர் பாண்டமங்கலம், காவல்காரன் தெருவில் உள்ள நியாய விலைக் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.35-க்கு இன்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆர்வத்துடன் ரேஷன் கடைகளுக்கு வந்த பொதுமக்கள் வந்ததற்கு வெங்காயம் வாங்கி சென்றனர்.
சந்தை மற்றும் சில்லறை விற்பனையில் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.ஆனால் வெங்காயம் தரமானதாக இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்து உள்ளனர்.

