சுற்றுலா வாகனங்களுக்கு சீட்டுகளின் அடிப்படையில் பர்மிட் வழங்க திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் மனு
சுற்றுலா வாகனங்களுக்கு சீட்டுகளின் அடிப்படையில் பர்மிட் வழங்கக் கோரிக்கை: திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் மனு
திருச்சி மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யு.) பொதுச் செயலாளர் சந்திரன், மாவட்டத் தலைவர் சுரேஷ், சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயளிடம் முதலமைச்சருக்கான கோரிக்கை மனுவை அளித்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 87 ஆயிரம் மேக்சி கேப் (Maxi Cab) வாகனங்கள் சுற்றுலா, பள்ளி, கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்களுக்குச் சேவை செய்து வருகின்றன. வாகன உரிமையாளர்களே பெரும்பாலும் ஓட்டுநர்களாகவும் பணியாற்றி, சுயதொழிலாக இதனைச் செய்து வருகின்றனர். கடந்த 1990–92 ஆம் ஆண்டுகளில், இந்த வாகனங்கள் 12+1 என்ற அடிப்படையில் பயணிகள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டன. அதன் அடிப்படையிலேயே தற்போதும் பர்மிட் (அனுமதி) வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது தயாரிக்கப்படும் வாகனங்கள் 17, 19, 21+1 என்ற எண்ணிக்கையிலான இருக்கைகளுடன் வெளிவருகின்றன. இருப்பினும், இன்னமும் 12+1 என்ற எண்ணிக்கையிலேயே பர்மிட் வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக, பிற மாநிலங்களுக்குச் செல்லும்போது கூடுதல் இருக்கைகளுக்குப் பர்மிட் இல்லாததால் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. மேலும், இந்த வாகனங்கள் எதிர்பாராமல் விபத்தில் சிக்கினால், வாகன உரிமையாளர்களுக்கும் பயணிகளுக்கும் இன்சூரன்ஸ் (காப்பீடு) நிறுவனங்கள் எந்தவித நஷ்டஈடும் வழங்குவதில்லை. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் கூடுதலாகப் பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறி, இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுத்துவிடுகின்றன.
ஆண்டுதோறும் 50 முதல் 100 வாகனங்கள் வரை விபத்தில் சிக்குவதாகத் தரவுகள் கூறுகின்றன. இவற்றிற்கு எந்தவித இழப்பீடும் பெற முடியாமல் வாகன உரிமையாளர்களும், அதில் பயணித்த பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
ஒருபுறம் விபத்தினால் ஏற்படும் இழப்பு, மறுபுறம் நிதி நிறுவனங்களின் நெருக்கடி என வாகன உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். எனவே, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களைப் போல, வாகனங்களில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பர்மிட் வழங்கி, வாகன உரிமையாளர்களும் பொதுமக்களும் பயனடையும் வகையில் பர்மிட் விதியை விரிவாக்கம் செய்து தர வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மனுவைக் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இதனைத் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குப் பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார்.
ஆட்சியரிடம் மனு அளித்த போது சங்க நிர்வாகிகள் முஸ்தபா, வன்புலி ரகு, குமார், தனபால், சுந்தர், நூர்ஹாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

