திருச்சி டைனமிக் ரோட்டரி சங்கம் சார்பில் “நீரின்றி அமையாத உலகு” என்ற பெயரில் குடிநீர் வழங்கும் சேவைத் திட்டம் தொடக்கம். யுனிவர்சல் வாட்டர் சொல்யூஷன் நிறுவனத்திற்கு நன்றி
திருச்சி டைனமிக் ரோட்டரி சங்கம் சார்பில் “நீரின்றி அமையாத உலகு” என்ற பெயரில் குடிநீர் வழங்கும் சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக, அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு நிறுவப்பட்டு, அண்மையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு இச்சேவை திட்டத்திற்கு வரவேற்பும் பாராட்டும் தெரிவித்தனர்.
இத்திட்டத்திற்கு உறுதுணையாக இருந்து குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கி உதவிய ‘யுனிவர்சல் வாட்டர் சொலுஷன்’ நிறுவனத்தின் உரிமையாளர் பி. முரளிதரன் அவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து திருச்சி டைனமிக் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ராஜ்மோகன் கூறுகையில், “பொதுமக்களுக்குத் தூய்மையான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட இந்த சேவை முயற்சி ஒரு தொடக்கம் மட்டுமே. இனிவரும் நாட்களில் பல்வேறு பொது இடங்கள் மற்றும் தேவையான பகுதிகளில் தூய்மையான குடிநீர் மக்களைச் சென்றடையும் வகையில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

