திருச்சியில் இன்று ரூ.5000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது . லஞ்ச ஒழிப்புத் தறையினர் அதிரடி நடவடிக்கை
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் ராமமூர்த்தி (வயது 42) இவரிடம் திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த சக்தி கணபதி தங்களின் அப்பார்ட்மெண்ட் சொத்து வரி மற்றும் பெயர் மாற்றம் செய்வது சம்பந்தமாக அணுகி உள்ளார். அப்போது பில் கலெக்டர் ராமமூர்த்தி அவரிடம் ரூ. 5000 லஞ்சம் கேட்டார். இதனைக் கொடுக்க விரும்பாத சக்தி கணபதி இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று பொறிவைப்பு நடவடிக்கை மூலமாக அவரை கைது செய்ய முடிவு செய்தனர்.

பின்னர் ரசாயனம் தடவிய ரூபாய் ஐந்தாயிரம் பணத்தை சக்தி கணபதியிடம் கொடுத்து அனுப்பினர். பின்னர் அதனை சக்தி கணபதி, பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டரிடம் வழங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்
இந்த சம்பவத்தால் பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

