Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இணையதளக் காதலை கைவிட மறுத்த மகளை அடித்துக் கொன்ற தாய்.

0

'- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலைக் கைவிட மறுத்த 19 வயது இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

Ad banner

ஆணவக் கொலையாகக் கருதப்படும் இச்சம்பவத்தில் பெண்ணின் தாய் மற்றும் அண்ணன் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைத்தளம் மூலம் உருவான காதலுக்குக் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பெற்ற மகளையே தாயும் மகனும் இணைந்து அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கயத்தாறு வட்டாரக் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி எஸ்தர் பாலின் (வயது 37). இந்த தம்பதியருக்கு சிவஞானம் (வயது 20) என்ற மகனும், அபிசெல்வி (வயது 19) என்ற மகளும் இருந்தனர். அபிசெல்வி அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

கல்லூரிப் பெண் அபிசெல்விக்கும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளமான ‘இன்ஸ்டாகிராம்’ மூலமாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்குள்ளும் தீவிர காதலாக மாறியுள்ளது.அபிசெல்வியின் இன்ஸ்டாகிராம் காதல் விவகாரம் சமீபத்தில் அவரது வீட்டிற்குத் தெரிய வந்துள்ளது:

சேலத்தைச் சேர்ந்த வாலிபருடனான காதலுக்கு அபிசெல்வியின் தாய் எஸ்தர் பாலின் மற்றும் அண்ணன் சிவஞானம் ஆகியோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், காதலைக் கைவிடுமாறு அபிசெல்வியை அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி, எச்சரித்தும் வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று இரவு இந்த காதல் விவகாரம் தொடர்பாக வீட்டில் மீண்டும் கடுமையான வார்த்தைகளுடன் மோதல் வெடித்தது. அப்போது தங்களது பேச்சைக் கேட்காமல் காதலில் உறுதியாக இருந்த அபிசெல்வி மீது ஆத்திரமடைந்த தாயும் அண்ணனும் இணைந்து, அவரை மரக்கட்டை மற்றும் ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அபிசெல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இக்கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் கயத்தாறு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த கல்லூரி மாணவி அபிசெல்வியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெற்ற மகளையே அடித்துக் கொன்ற தாய் எஸ்தர் பாலின் மற்றும் அதற்குத் துணையாக இருந்த அண்ணன் சிவஞானம் ஆகிய இருவர் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை தற்போது கைது செய்துள்ளனர். இணையதளக் காதலால் பெற்ற மகளையே தாயும் அண்ணனும் அடித்துக் கொன்ற இச்சம்பவம், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.