இந்திய-சீன எல்லையான சிக்கிம் மலைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு விபத்தில் உயிரிழந்த லால்குடி ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திண்ணியம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ்-ராஜம்மாள் தம்பதிகள். இவர்களுக்கு தேவஆனந்த் உள்ளிட்ட இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தேவஆனந்த் கடந்த 2014 -ஆம் ஆண்டு இந்திய ராணுவ பணியில் சேர்ந்தார். சிக்கிம் மாநிலத்தில் இந்திய- சீன எல்லைப் பகுதியில் ரானுவ தடவாள ஆயுதங்கள் மற்றும் உதிரி பாகங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 30-ஆம் தேதி பணியினை முடித்து விட்டு, ராணுவ முகாமிற்கு மலைப் பகுதியிலிருந்து ராணுவ வாகனம் மூலம் வந்த போது, வாகனம் மலைப் பகுதியிலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்ததில் சுக்கு, நூறாக நொருங்கியது. இதில் வாகனத்தில் பயனித்த தேவஆனந்த் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தேவ ஆனந்த் உயிரிழந்த செய்தி லால்குடியில் உள்ள அவரது உறவினருக்கு ராணுவ வீரர்கள் தகவல் கொடுத்தனர்.
இருப்பினும் உயிரிழந்த தேவ ஆனந்த உடலை விரைவாக சொந்த கிராமத்திற்கு கொண்டு வர உதவிடுமாறு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவிடம் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம், பேச்சுவார்த்தை நடத்திய திருச்சி சிவா எம்பி, ராணுவ வீரரின் உடலை விரைந்து கொண்டு வர உதவி புரிந்தார்.
இதனடிப்படையில் சிக்கிம் மாநிலத்திலிருந்து ராணுவ விமானம் மூலம் பெங்களூர் விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு வந்தது.
பின்னர், பெங்களூரிலிருந்து சாலை மார்க்கமாக திருச்சி லால்குடி பகுதியில் உள்ள திண்ணியம் கிராமத்துக்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது.
கிராம மக்கள் அஞ்சலிக்காக ராணுவ வீரரின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி சிவா எம்பி, எம்எல்ஏ செளந்திரபாண்டியன், மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மக்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர், அதே பகுதியில் உள்ள கல்லறையில் அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.