இரும்பு கார்டர் மாற்றும் பணி நடைபெறுவதால்
திருச்சி மேலப்புதூர் – பாலக்கரை இடையிலான சுரங்கப்பாதை இன்று முதல் மூடப்பட்டது.
போக்குவரத்தில் மாற்றம்,கலெக்டர் உத்தரவு
திருச்சி மாநகரின் மிக முக்கிய சாலையாக இருப்பது மேலப்புதூர்-பாலக்கரை ரயில்வே சுரங்கப்பாலம். இந்த பாலத்தை தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த ரயில்வே சுரங்கப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி இரயில் நிலையம் மற்றும் திருச்சி மலைக்கோட்டை நிலையத்திற்கு இடையில் உள்ள இந்தப்பாலத்தில் புதிதாக இரும்பு கார்டர் மாற்ற வேண்டியுள்ளதால் திருச்சி மேலபுதூர் – பாலக்கரை இடையிலான சுரங்கப்பாதை இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்பட்டுகிறது என திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; திருச்சி கிழக்கு, திருச்சி இரயில் நிலையம் மற்றும் திருச்சி மலைக்கோட்டை ரயில் நிலையத்திற்கு இடையே மேலப்புதூர் சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதையின் மேல் புறத்தில் கடந்து செல்லும் ரயில் பாதையின் இரும்பு பாலம் மாற்றப்பட இருக்கின்றது.
இதனால் மேலப்புதூர் – பாலக்கரை கீழ் பாலம் வழியாகசெல்லும் சாலைபோக்குவரத்தினை இன்று காலை 9. மணிமுதல் வருகிற 28. ந்தேதி காலை 9.மணிவரை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுகின்றது. இதனால் இந்த பாலத்தின் கீழ் செல்லும் சாலைபோக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பாலக்கரை நோக்கி வரும் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும் தலைமை தபால் அலுவலகம் – மேலபுதூர் – காண்வென்ட் ரோடு-பீமநகர் – காவேரி தியேட்டர் பாலம் வழியாக பிரபாத் ரவுண்டானா வந்தடைந்து அங்கிருந்து செல்லவேண்டும். அதேபோல், சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் காந்தி மார்க்கெட் வழியாக பிரபாத் மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும் பிரபாத் ரவுண்டானா – வேர்ஹவுஸ் -முதலியார்சத்திரம் – குட்ஷெட் பாலம் வழியாக சென்று அங்கிருந்து மற்ற இடங்களுக்கு செல்லவேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

