தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு பண்டிகைக்கு முன்பே விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாநிலமெங்கும் உள்ள ரேஷன் கடைகள் வழியே பரிசுப் பொருட்கள் சீராகச் சென்றடைய அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
அமைச்சர் காந்தி அளித்த பேட்டியில், பொங்கல் பரிசுத் தொகுப்புகள் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளன. ஜனவரி 10ஆம் தேதிக்குள் விநியோகப் பணிகளை முழுமையாக முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்மூலம் குடும்பங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு முன்பே பரிசுகளைப் பெற்று, தடையின்றி பயன்படுத்த இயலும்..
பொது விநியோகத் திட்டத்தின்கீழ், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ரேஷன் கடைகள் வழியே இத்தொகுப்புகள் விநியோகிக்கப்படும். தாமதம் தவிர்க்கவும், தகுதியுள்ள எந்தக் குடும்பமும் விடுபடாதிருக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலுமுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவார்கள் என அரசு உறுதிப்படுத்தியுள்ளது. உரிய கண்காணிப்புடன், விநியோகப் பணிகள் ஒழுங்கான முறையில் நடைபெறும் எனவும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2026ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தைப்பொங்கல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.
வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசாக வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதித்துறை அதிகாரிகளின் ஒப்புதல் இதற்கு கிடைத்துள்ள நிலையில், ஆரம்பத்தில் ரூ.5,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ரூ. 3000 வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எனினும், மாநிலத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு இம்முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது. ரூ.5,000 வழங்கினால் கடுமையான நிதி இழப்பு ஏற்படும் என நிதித்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து, ரூ.3,000 வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், இதனால் பெரிய நிதிச் சுமை இருக்காது என முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாள், விவசாயத்திற்கும் மனித குலத்திற்கும் நன்றி செலுத்தும் முக்கிய பண்டிகையாகும். இந்த பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட உதவும் வகையில், ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.
முதலில் பரிசாக ரூ.5,000 வழங்க தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் திட்டமிட்டதாக கூறப்பட்டது. அதன்படி, ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, மற்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பரிசு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படும் என தகவல் வெளியானது.
இருப்பினும், தமிழகத்தின் அதிகரித்துவரும் நிதி பற்றாக்குறை, ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் பல நலத்திட்டங்கள், மானியங்கள், உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள், மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம் போன்ற காரணங்களால் நிதி சவால்கள் அதிகரித்தன. இதன் விளைவாக, ரூ.5,000-க்கு பதிலாக ரூ.3,000 வழங்க அதிகாரிகள் பரிந்துரைக்க, முதல்வர் ஸ்டாலின் அதனை ஏற்றுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏற்கனவே விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் 13ஆம் தேதி முதல் இந்த விரிவாக்கப்பட்ட திட்டம் செயல்படத் தொடங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, மக்கள் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளனவா என்பதை அறிய முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய கள ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்களைக் கொண்ட சிறப்புக்குழு நேரடியாக வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினருடன் பேசும்.
பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத் தொகை மற்றும் பள்ளி உதவி போன்ற நலத்திட்டங்கள் அவர்களுக்கு கிடைத்துள்ளதா என விசாரித்து, ஒரு படிவத்தின் மூலம் விவரங்களைச் சேகரிப்பார்கள். படிவத்தைச் சமர்ப்பிப்பவர்களுக்கு QR குறியீடு வழங்கப்படும், இதன் மூலம் கோரிக்கை நிலையை அறிய முடியும். மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு காணவும், அல்லது அவற்றை தேர்தல் வாக்குறுதிகளாகவும் திமுக தரப்பு முன்வைக்கும் என ஆளும் கட்சி தரப்பு தெரிவித்து உள்ளது.

