பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் வாயிலில் தலை தூக்கி உள்ள பேனர் கலாச்சாரம்.கண்டுகொள்ளாத மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள்.
பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் வாயிலில் தலை தூக்கி உள்ள பேனர் கலாச்சாரம்.கண்டுகொள்ளாத மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள்.
திருச்சி பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் (Armoury Gate) பகுதியில், பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளால் வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய பெரிய பேனர்கள் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக மாறியுள்ளது.
முக்கிய போக்குவரத்து சந்திப்பாக உள்ள இந்த பகுதியில், சாலையின் இருபுறங்களிலும் பேனர்கள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதி முழுவதும் விளம்பர மேடையாகவே மாறியுள்ள நிலை காணப்படுகிறது.
ரயில்வே வளாக நுழைவாயிலில் இவ்வாறு கட்டுப்பாடின்றி பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது, போக்குவரத்து பாதுகாப்புக்கும், பொதுமக்கள் நடமாட்டத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
மேலும், அரசு மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைப்பது விதிமீறலாகும். இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கேள்விக்குறியாக உள்ளது.
மகாத்மா காந்தியின் சிலையை மறைக்கும் அளவிற்கு பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
“நகரின் அழகியையும், ஒழுங்கையும் காக்க வேண்டிய இடத்தில், பேனர் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது” என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் வாயிலில் வைக்கப்பட்டுள்ள அனுமதி இல்லாத பேனர்களை உடனடியாக அகற்றி, அந்த பகுதியை பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான நிலைக்கு கொண்டு வர வேண்டும் என மாநகராட்சி நிர்வாகமும், ரயில்வே துறையும் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

