அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பிரதம மந்திரியின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2025-26-ம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள யு.எம்.ஐ.எஸ். எண் https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும். மேலும், கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அலுவலக நேரங்களில் அணுகி விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

