உருவ கேலி செய்து 9ம் வகுப்பு மாணவியை கொன்றுள்ள 3 அரசு பள்ளி ஆசிரியைகள் மீது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் ?
அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக அழுத்தம் கொடுத்ததாலும், உருவ கேலி செய்ததாலும் 9 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை ரொட்டிகடை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் குமரன் (வயது 39). இவரது மனைவி வல்சல குமாரி. இந்த தம்பதிக்கு முத்து சஞ்சனா மற்றும் முத்து சாய்னா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். வால்பாறை ரொட்டிகடை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் முத்து சஞ்சனா (வயது 14) 9ம் வகுப்பும், முத்து சாய்னா 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் முத்து சஞ்சனாவுக்கு அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக அழுத்தம் கொடுத்ததாகவும், பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பள்ளியில் உள்ள அறிவியல் ஆசிரியர் சிந்தியா என்பவர் பலபேர் முன்பாக அவமானப் படுத்தியதாகவும், தமிழ் ஆசிரியர் ராணி பாய் என்பவர் வேண்டுமென்றே மற்ற மாணவர்கள் முன்பாக கன்னத்தில் அறைந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிநது.
மேலும் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் சியாமளா தேவி என்பவர் சஞ்சனாவின் உருவத்தையும் , நிறத்தையும் அவமானப்படுத்தும் வகையில் பேசி புத்தகங்களை வீசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபோல் தொடர்ச்சியாக முத்து சஞ்சனாவை சக மாணவர்கள் முன் அவமானப்படுத்தி வந்ததால் மாணவி கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 10ம் தேதி பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் சஞ்சனா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். உடலில் தீப்பற்றிய நிலையில் சஞ்சனாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சஞ்சனாவை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர்.
இதையடுத்து மாணவி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி சஞ்சனா நேற்று முன்தினம் புதன்கிழமை (நவம்பர் 19) இரவு உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் மாணவியிடம் வாக்கு மூலம் பெற்ற பிறகும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சஞ்சனாவின் தந்தை சக்திவேல் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் நேற்று இறந்த மாணவியின் உடலை வாங்க மறுத்து மாணவியின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
மேலும் மாணவியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ஆசிரியர்கள் ராணிபாய், நித்தியா, சியாமளா தேவி ஆகியோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவியின் தந்தை வலியுறுத்தி உள்ளார்.
45 விழுக்காடு தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சஞ்சனா ஆசிரியைகள் மிரட்டியதால் தற்கொலை முயற்சி செய்ததாகவும், சிறியதாக ஏதாவது நடக்கும் என்று நினைத்ததாகவும், இவ்வளவு பெரிதாக ஆகும் என்று எனக்கு தெரியாது என பேசும் வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுதா பேசுகையில், “மாணவி தொடர்ச்சியாக 3 ஆசிரியர்களால், அவமானப்படுத்தப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியை ஏற்கனவே அடித்த நிலையில் அவரது தந்தை டிசி கேட்டு சென்றுள்ளார். அப்போது பள்ளி தலைமையாசியர் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று கூறி அனுப்பி உள்ளார். ஆனால் தொடர்ச்சியாக மாணவியை அவமானப்படுத்தியதால் அந்த விஷயத்தை எதிர்கொள்ள தெரியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இதில் 3 ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுடன் எப்படி நடக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த பிளஸ் டூ மாணவி கத்தியால் கொல்லப்பட்டார் , அந்த மாணவியின் தாயாருக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆறுதல் கூறி உதவித்தொகை அளித்தார்.
தற்போது தமிழக அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு அரசு பள்ளியில் படிக்கும் மாணவியை உருவ கேலி செய்து கொன்றுள்ள மூன்று ஆசிரியைகள் மீது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாகும் .
இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் தான் அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

