திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் வேலு (வயது.34) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் 12 மற்றும் 8 வயது கொண்ட இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், 6 வருடங்களுக்கு முன்பு தம்பதியருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, வேலுவின் மனைவி இளைய மகளுடன் தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின் மூத்த மகள் தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார்.
தனியார் பள்ளியில் கல்வி கற்று வந்த அந்த சிறுமி, தந்தையின் மது பழக்கத்தால் நாள்தோறும் துன்பப்பட்டதாக கூறப்படுகிறது. வேலு, அடிக்கடி கத்தியை காட்டி மிரட்டியதுடன், சிறுமியின் மீது பலமுறை பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தந்தையின் அச்சுறுத்தலால், சிறுமி இதை யாரிடமும் வெளிப்படுத்தாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அக்டோபர் 27ஆம் தேதி வேலு தனது மகளுடன் சேலம் நோக்கி பேருந்தில் பயணித்தபோது, மீண்டும் அசிங்க செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சியைப் பார்த்த சக பயணிகள் உடனடியாக வேலுவை பிடித்து அடித்து, நடுவழியிலேயே இறக்கி விட்டனர். பின்னர் சிறுமியை உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றபோது, முகவரி தெரியாத காரணத்தால், அருகில் இருந்த கிறிஸ்தவ சபையின் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அங்குள்ள நிர்வாகிகள் சிறுமியிடம் பேசும்போது, தந்தையின் கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமி மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டு, போலீசில் முறையிடப்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் வேலுவை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
தற்போது அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

