ரவுடி நாகேந்திரனின் உடல் அடக்கம் செய்யப்படவிருக்கும் நிலையில் பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்து 2024 ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் முதல் குற்றவாளியாக வடசென்னையை சேர்ந்த முக்கிய ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டார்.
இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் உடல்நல குறைவு ஏற்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு இருந்தார். மஞ்சள் காமாலை நோயாலும் பாதிக்கப்பட்டு இருந்த நாகேந்திரன் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் உடல்நிலை மோசம் அடைந்து கடந்த அக்டோபர் 9ஆம் தேதி உயிரிழந்தார்.
நீதிமன்ற உத்தரவுபடி அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று (அக்டோபர் 11) குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே தந்தை நாகேந்திரன் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதி கோரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரனின் மகன்களான அஸ்வத்தாமன் மற்றும் அஜித் ராஜ் இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் இருவருக்கும் அனுமதி கிடைத்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் வியாசர்பாடியில் உள்ள நாகேந்திரன் வீட்டுக்கு அழைத்து சொல்லப்பட்டனர் .
நேற்று நாகேந்திரனின் உடல், வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டில் இறுதிச் சடங்கிற்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, அவரது வீடு மற்றும் முல்லை நகர் சுடுகாடு ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை வடக்கு, தெற்கு இணை ஆணையர்கள் 2 பேர், 6 இணை ஆணையர்கள், 12 கூடுதல் ஆணையர்கள், 125 எஸ்.ஐ.கள், 400க்கும் அதிகமான ஆயுதப்படை காவலர்கள் என சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
நேற்று மாலை முதலே ரவுடி நாகேந்திரனின் வீடு அமைந்துள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.