மின்தடை காரணமாக நெரிசல் ஏற்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறு” என் விளக்கம் அளித்த மின்வாரிய தலைமை பொறியாளருக்கு பதவி உயர்வு. தமிழக அரசு விளக்கம்.
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த கரூர் மின்வாரியத் தலைமைப் பொறியாளருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவிய நிலையில், இது உள்நோக்கத்துடன் பரப்பப்படும் செய்தி என தமிழக அரசு மறுத்துள்ளது.
தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மக்கள் உயிரிழப்பு குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சில வதந்திகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வந்தன.
தவெக தலைவர் விஜய் கரூரில் பேசும்போது மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அதிக தள்ளுமுள்ளு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை கரூர் மின்வாரிய தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி திட்டவட்டமாக மறுத்தார்.
ராஜலட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “விஜய் பேசும்போது மின்சாரம் தடை செய்யப்படவில்லை. உயிரிழப்பு செய்தி வெளியான பிறகு இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்தன, அவை உண்மையல்ல. சில தொண்டர்கள் மரங்கள் மற்றும் மின்கம்பங்களில் ஏறியதால், பாதுகாப்பு கருதி சிறிது நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. போலீஸ் உதவியுடன் அவர்களை இறக்கியவுடன் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது. மின்தடை காரணமாக நெரிசல் ஏற்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறு” என்று விளக்கினார்.
இந்நிலையில், கரூர் மின்வாரிய தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமிக்கு கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பதவி உயர்வு வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தகவல் பல சமூக ஊடகங்களில் பரவியதுடன், கடும் விவாதங்களுக்கு வழிவகுத்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம், மின்வாரிய அதிகாரி ராஜலட்சுமிக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுக்கும், கரூர் சம்பவத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், முன்கூட்டியே பதவி உயர்வு கடிதம் அனுப்பப்பட்டது என்றும், உள்நோக்கத்துடன் பொய் பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
அதாவது, கரூர் மின்வாரியத் தலைமைப் பொறியாளருக்கு பதவி உயர்வு.. உள்நோக்கத்துடன் பரப்பப்படும் செய்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், “கரூரில் கடந்த 27.09.2025 அன்று த.வெ.க. கட்சித் தலைவர் விஜய் பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, கரூர் மாவட்ட மின்வாரியத் தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில், இவர் உட்பட 5 பேர் தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளனர். கரூரில் விஜய் கூட்டம் நடைபெறுவதற்கு 18 நாட்களுக்கு முன்பாகவே, கடந்த 09.09.2025 அன்று தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத் தலைவர் இவர்களின் பதவி உயர்வுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
ஆனால், ராஜலட்சுமி அவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டதைப்போல் திரித்து, மற்ற 4 பேர் பதவி உயர்வு பெற்றதை மறைத்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. தவறான தகவலைப் பரப்பாதீர்!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 18 நாட்களுக்கு முன்பாகவே, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைவர், 2025 செப்டம்பர் 9 ஆம் தேதி ராஜலட்சுமி உட்பட ஐந்து அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு ஆணை பிறப்பித்திருந்தார். அந்த ஆணை ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. ஆனால் சில சமூக ஊடகப் பக்கங்கள், அந்த ஆவணத்தின் ஒரு பகுதியை மட்டும் பகிர்ந்து, ராஜலட்சுமிக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டதாக தவறாக விளக்கியதாக TN Fact Check விளக்கம் அளித்துள்ளது.