முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் மணிகண்டனால் 3 முறை கரு கலைக்கப்பட்ட நடிகை சாந்தினி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு.
முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி நடிகை சாந்தினி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
சமரசம் செய்யப்பட்டதாக அரசு தெரிவித்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை ஏன் எதிர்க்கவில்லை என கேள்வி.
கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இந்த நிலையில் மணிகண்டன் தன்னுடன் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்துவந்ததாகவும், அதன் காரணமாக தான் மூன்று முறை கர்ப்பமடைந்ததாகவும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறியதைத் தொடர்ந்து கர்ப்பத்தைக் கலைத்ததாகவும், ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் திரைப்படத் துணை நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.
அதன் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை முதலில் மாவட்ட நீதிமன்றம், பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதன்பின் ஜாமீனில் வெளியில் வந்தார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் மணிகண்டனும், சாந்தினியும் சமரசம் செய்து கொண்டனர். அதனடிப்படையில் மணிகண்டன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த நிலையில் மணிகண்டன் தனக்குச் சில ஒப்பந்தங்கள் செய்து கொடுத்ததாகவும், ஆனால் அதைச் செய்து கொடுக்காமல் வழக்கை நான் வாபஸ் பெற்று, அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து தன்னைச் சந்திக்காமல் தலைமறைவாகிவிட்டதாகவும் நடிகை சாந்தினி குற்றம்சாட்டினார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி நடிகை சாந்தினி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமரசம் செய்யப்பட்டு விட்டதாக தமிழ்நாடு அரசு தகவல் சொன்ன நிலையில், அதற்கு நடிகை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் சென்னை உயர்நிதிமன்ற உத்தரவை எதிர்த்து ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமினை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.