திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, கள்ளக்காதல் காரணமாக கூலித் தொழிலாளி ஒருவரை அவரது மனைவி காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை அருகேயுள்ள சொக்குபிள்ளைப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 45), கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி பழனியம்மாள் (35). இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் பழனியம்மாளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கள்ளக்காதல் தொடர்ந்துவந்தது.
இதையடுத்து, தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்தன. சில தினங்களுக்கு முன்பு, இருவரும் சொந்த ஊரைவிட்டு, நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவார்பட்டியில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு மாரியப்பன் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறி, அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், பரிசோதித்த மருத்தவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இது பற்றிய தகவல் அறிந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த நிலக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாரியப்பனின் கழுத்தில் காயங்கள் இருப்பதைக் கவனித்த போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், சந்தேகத்தின் பேரில் மனைவி பழனியம்மாளை போலீசார் பிடித்து விசாரித்தபோது, கணவனின் மரணத்தில் உள்ள உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. காதலன் சூர்யாவுடன் சேர்ந்து, மாரியப்பனை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக பழனியம்மாள் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.