மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தைச் சேர்நத சரத்குமார் (வயது 30) குவைத்தில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். தனது சொந்த கிராமத்தில் உள்ள சங்கீதா என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
வெளிநாட்டில் இருந்தபோதும், சங்கீதாவுக்கு பணமும் நகைகளும் அனுப்பி வைத்து தனது காதலை வளர்த்துள்ளார் சரத்குமார். இதுவரை 15 சவரன் நகைகள், சுமார் ரூ.2 லட்சம் ரொக்கம் வரை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், திருமணமும் நடைபெற இருந்தது. ஆனால், அப்போது தான் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது.
சங்கீதா, தனது இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையத்திற்கு புகாரளிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியாற்றும் உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தியுடன் அவர் பழகத் தொடங்கியுள்ளார். இந்த தொடர்பு சில மாதங்களில் நெருக்கமாகி, நேரடியாக சரத்குமாரின் வாழ்க்கையில் இடியை இறக்கியது.
உதவி ஆய்வாளரும், சங்கீதாவும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். வீடியோ அழைப்பின் மூலம் சங்கீதா மற்றும் சூர்யமூர்த்தி, “நாங்கள் திருமணம் செய்யப் போகிறோம்” என நேரடியாக சரத்குமாரிடம் தெரிவித்ததோடு, இனி சங்கீதாவை தொல்லை செய்யக் கூடாது என மிரட்டல்களும் விடுத்துள்ளனர்.
இதனால், மன வேதனையடைந்த சரத்குமார், குடும்பத்தினரிடம் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளர். பின்னர், குவைத்தில் தனது தங்குமிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், இவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சரத்குமாரின் மரணத்திற்கு சங்கீதாவும், காவல்துறை அதிகாரியும் தான் காரணம் என்று உறவினர்கள் புகாரளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் சென்று இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தி முதற்கட்டமாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.