விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு இன்று ஊர்வலம் வரும் வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார் .
விநாயகர் சதுர்த்தி விழாவில் உச்சமாக வீடுகளிலும் சாலையில் முக்கிய சந்திப்புகளிலும் பொதுமக்கள் மற்றும் பல அமைப்புகள் சார்பாக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று காவிரியில் கரைக்கப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர், வாத்தலை, கல்லக்குடி, புள்ளம்பாடி, பூவாளூர், ஆங்கரை, திருவெறும்பூர், துவாக்குடி, காட்டூர், பால்பண்ணை, டி.வி.எஸ். டோல்கேட், சஞ்சீவி நகர் சந்திப்பு, கே.கே.சாலை சந்திப்பு, திருவானைக்காவல், எடமலைப்பட்டிபுதூர் என பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் 1,182 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் இன்று காவிரி ஆறு மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடைபெறவும், சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகவும் திருச்சி மாநகரில் 50 டாஸ்மாக் மதுபான கடைகளை இன்று மட்டும் மூட மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும், புத்தாநத்தம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கருமலை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையும் இன்று மூடப்பட உள்ளது.
தொட்டியம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை செப்டம்பர் 2-ந் தேதி மூட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.