எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.திருச்சி போலீஸ் கமிஷனரிடம் அதிமுக மாநகர செயலாளர் சீனிவாசன் புகார் .
திருச்சியில் பரபரப்பு :
எடப்பாடியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர்கள் கிழிப்பு.
போலீஸ் கமிஷனரிடம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மனு.
திருச்சியில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தினர்.இதை அடுத்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவினர் மாவட்ட செயலாளர், முன்னாள் மாமன்ற துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை காவல்துறை கமிஷனரிடம் புகார் மனு அளித்தனர்.
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 23, 24, 25 ஆகிய தேதிகளில் திருச்சிக்கு வருகை தரவுள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பேரணியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இதை முன்னிட்டு அதிமுக சார்பில் மாநகரில் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று பேனர்கள் கடந்த 2 நாட்களாகவே வைக்கப்பட்டு வருகிறது. இந்தவகையில் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் குட்ஷெட் மேம்பாலம், கருமண்டபம், காந்தி மார்க்கெட், உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய அளவில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர்களை நேற்று மாலையில் ஆயுதப்படை போலீசார்கள் 5க்கும் மேற்பட்டோர் அகற்றினர். இது குறித்து விசாரித்த போது போலீசார் கூறுகையில்,
‘‘ தற்போது காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. சாலையில் ஓரமாக பெரிய அளவில் வைக்கப்படும் பேனர்கள் திடீர் என்று பறந்து வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயம் உள்ளது. மேலும் பேனர்கள் வைக்க வேண்டும் என்றால் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். உரிய அனுமதியும் பெறாமல், பெரிய அளவில் பேனர்கள் இருந்ததால் அப்புறப்படுத்தினோம் என்றனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. பேனர்கள் அகற்றப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்டஅதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் இன்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி.ரத்தினவேல், பகுதி செயலாளர்கள் அன்பழகன், ராஜேந்திரன், நாகநாதர் பாண்டி, ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்கள் பொன்னர், கருமண்டபம் சுரேந்தர், இளைஞர் அணி துணைச் செயலாளர் சில்வர் சதீஷ்குமார், வழக்கறிஞர் அணி துணை தலைவர் வக்கீல் முல்லை சுரேஷ்,இணைச் செயலாளர் வக்கீல் தினேஷ் பாபு, நிர்வாகிகள் ஆசை தம்பி ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.