திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் விவகாரம். 3 பேர் மீது வழக்குப் பதிவு.
கே.கே.நகர் போலீசார் விசாரணை.
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள் உள்பட சுமார் 2,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையின் 18-வது தொகுதியில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த நா.ரகுராம் (வயது 21), தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்த மோ.கோவிந்தராஜ் (வயது 26) ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவர்கள் இருவரையும் அழைப்பதற்கு சிறைக் காவலர் குமரேசன் சிறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர்கள், குளிக்க பயன்படுத்தப்படும் வாளியில் 20 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து, அவர்களிடம் சிறைத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அஜித் என்ற கைதியிடம் கஞ்சா வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து, சிறைத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் காவல் நிலைய போலீஸார் 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.