தந்தை பெரியார் அரசு கல்லூரியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .
தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பாக இன்று உலக மக்கள் தொகைத் தின விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் கா. வாசுதேவன் அவர்கள் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக இராமகிருஷ்ணா மருத்துவமனை இயக்குநரும் குடலியல் மற்றும் இரப்பை சிறப்பு மருத்துவருமான எம்.எஸ். விஜய் ஆனந்த் அவர்கள் ‘இரப்பை மற்றும் குடலின் சுகாதார சவால்கள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றியதாவது இன்றைய வாழ்க்கைச் சூழலில் நிறைய நோய்கள் வருகின்றன ஆனால் மனிதருக்கு நோய் முதன் முதலில் தோன்றும் இடம் வயிற்றுப் பகுதிதான். இங்கிருந்துதான் மற்ற அனைத்து நோய்களும் உருவாகின்றன. நமது வயிற்றுப் பகுதியை சரியாகக் கவனித்துக் கொண்டால் இதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கணையம், கல்லீரல்,சிறுநீரகம் மற்றும் ரத்த பகுதிகளில் தோன்றக்கூடிய நோய்களை நாம் கட்டுப்படுத்தலாம் அதற்கு முதல் காரணமான நம் வயிற்றை சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும். முதலில் நாம் உணவினை நன்றாக மென்று விழுங்க வேண்டும் உணவை அவசரமாக சாப்பிட்டுச் செல்லக்கூடாது, உணவுக்கென்று நேரம் ஒதுக்கி நன்றாக மென்று விழுங்க வேண்டும் மலக்குடலில் இருக்கக்கூடிய கழிவுகள் வெளியேற்றுவதில் கூச்சப்படுதல்,அடக்குதல் கூடாது இதனால் பாதி நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நாம் குழந்தையாக இருக்கும்போது நமக்கு தேவையான உணவு தண்ணீரை அழுது அதனைப் பெற்றுக் கொள்கிறோம் ஆனால் வளர்ந்த பிறகு நேரமின்மை, சோம்பேறித்தனம் இவைகளால் நாம் நேரத்திற்கு உணவினையும் தண்ணீரையும் தூக்கத்தையும் இந்த உடலுக்கு வழங்குவதில்லை. வயிறு, வாய் பகுதியில் நீண்ட நாள் இருக்கக்கூடிய புண்கள் கேன்ச கட்டிகளாக மாறுகின்றன. வாய்க்குள் புகையிலை பாக்கு பான்பராக் போன்றவை ஒதுக்கி வைப்பதன் மூலம் அவ்விடத்தில் புற்றுநோய் கட்டி உருவாகிறது, எனவே பொதுமக்களும் வளரும் தலைமுறையினரும் இறப்பை குடல் சார்ந்த சுகாதாரம் குறித்து விழிப்போடு இருக்க வேண்டும் வருமுன் காக்க வேண்டும் என உரையாற்றினார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக உயிர் வேதியல் துறைப் பேராசிரியரும் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளருமான முனைவர் எம். மாணிக்கவாசகம் நோக்கவிரையில் பேசியதாவது, உலக மக்கள் தொகை தினம் 1989 ஆம் ஆண்டு ஐநா சபையால் அறிவிக்கப்பட்டது.அதனால் உலகம் முழுவதும் சூலை 11ஆம் நாள் மக்கள் தொகை விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தற்போது உள்ள மக்கள் தொகை 146 கோடி இது உலக மக்கள் தொகையில் 19 சதவீதம் மக்கள் தொகை பெருக்கத்தால் உணவு இடம் மருத்துவம் வழங்குவது சவாலாக உள்ளது இதனால் விளைநிலங்கள், காடுகள் அழிக்கப்பட்டு நமக்கு தேவையான உயிர் காற்றான ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது மக்கள் தொகை அதிகரிப்பதை கட்டுப்படுத்த வேண்டும், முற்போக்குச் சிந்தனை வளர வேண்டும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று பேசினார்
உருமு தனலட்சுமி கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் இரா. ஹேமலதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்னும் தலைப்பில் பேசியதாவது:-
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்று திருமூலர் கூற்றை பின்பற்றி நாம் வாழ வேண்டும், நம் சிறந்த நண்பர் நமது உடலே மருத்துவக் கட்டமைப்பில் நமது தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக முன்னோடியாகத் திகழ்கிறது, அதனை பயன்படுத்தி நம் உடலுக்கு தேவையானதை செய்து ஆரோக்கியமாக வாழ வேண்டும். செல்போன் பார்ப்பதால் நீண்ட நேரம் விழிப்பது அதன் தொடர்பாக ஏற்படும் நோய்களை தவிர்க்க வேண்டும் என பேசினார்.
முன்னதாக தமிழ்த்துறை இணைப்பேராசிரியரும் யூத் ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவர் இரா் குணசேகரன் வரவேற்புரையும் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியரும் உதவி மைய ஒருங்கிணைப்பாளருமான முனைவர் செந்தில்குமார் நன்றியுரையாற்றினார்.
நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பை யூத் ரெட் கிராஸ் பொறுப்பு மாணவர்கள் செய்தனர்.நிகழ்வில் 550 முதுகலை மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.