திருச்சி மாவட்டத்தில் உள்ள 427 ஏரி, குளங்களில் விவசாயிகள், பொதுமக்கள் இலவசமாக மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நீா்வளத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள நீா்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண், மண் போன்ற சிறுவகைக் கனிமங்களை விவசாயிகள் தங்கள் வயல்களில் பயன்படுத்தவும், பொதுமக்கள் சொந்தப் பயன்பாட்டிற்கும், மண்பாண்டத் தொழில் செய்வோா் பயனடைய அனுமதி வழங்குதல் தொடா்பான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இதன்படி நீா்வளத் துறை அரியாறு கோட்டத்தின் 64 ஏரி, குளங்களுக்கும் மற்றும் ஊரக வளா்ச்சித்துறையின் 363 ஏரி, குளங்களுக்கும் என மொத்தம் 427 ஏரி, குளங்களிலிருந்து வண்டல் மண், களிமண், மண்ணை இலவசமாக வெட்டியெடுத்துச் செல்ல அரசின் இ-சேவை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நன்செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 75 கனமீட்டா்- 1 ஹெக்டேருக்கு 185 கனமீட்டா், புன்செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 90 கனமீட்டா் -1 ஹெக்டேருக்கு 222 கனமீட்டா் மற்றும் இதர சொந்த பயன்பாட்டுக்கு மண் ஆகியவை 30 கனமீட்டா் மற்றும் மட்பாண்டங்கள் செய்பவா்களுக்கு 60 கனமீட்டா் என்ற அடிப்படையில் கட்டணமின்றி அந்தந்த வட்டாட்சியரின் அனுமதி பெற்று வெட்டி எடுத்துச் செல்ல 30 நாள்களுக்கு மிகாமல் அனுமதி வழங்கப்படும்.
விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது அவரது விவசாய நிலம் அதே வருவாய் வட்டத்திற்குள் இருக்க வேண்டும். சிட்டா மற்றும் அடங்கல் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். மட்பாண்டங்கள் செய்வதற்கான களிமண் எடுக்க சம்பந்தப்பட்ட மண்பாண்டத் தொழிலாளா் சங்கம் அல்லது விஏஓ சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வட்டாட்சியரகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.