ஓடும் பஸ்ஸில் பாட்டியின் 3 பவுன் செயினை பறித்து சென்ற 2 டிப்டாப் பெண்களை மடக்கிப்பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள் .
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது 70). இவர் நேற்று பாரதியார் நகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவனைக்குச் சென்று விட்டு அரசுப் பேருந்தில் மணப்பாறைக்கு திரும்பிய போது, பேருந்தில் டிப்டாப்பாக வந்த இருபெண்கள், மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்துள்ளனர்.
கடைவீதி பேருந்து நிறுத்தத்திற்கு, பேருந்து வந்தபோது மூதாட்டியிடம் செயின் பறிக்கப்பட்டதைக்கண்ட சக பயணிகள் சத்தமிடவே பெண்கள் இருவரும் நைசாக தப்ப முயற்சித்துள்ளனர். உடனடியாக அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்களான சர்பட் ராயப்பன் மற்றும் பாலகுமரன் ஆகிய இருவரும் தப்பிச்செல்ல முயன்ற இரு பெண்களையும் மடக்கிப்பிடித்துள்ளனர்.
பின்னர் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், இருவரிடமும் மணப்பாறை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு இருபெண்களையும் மடக்கிப்பிடித்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
நேற்று காலை நேரத்தில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.